உசுப்பேத்தும் பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும்! – முஷாரப் வலியுறுத்து

“மக்களை உசுப்பேத்தும் பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தனது பெயர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கூறாதீர்கள். இதனாலேயே மக்கள் கிளர்ச்சி ஏற்படுகின்றது.”

– இவ்வாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் குற்றம் சுமத்தினார்.

இவ்வாறானவர்களின் உரைகளை மக்கள் நம்புவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இது வேதனை தரும் விடயம் என்றும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூழ்கின்ற கப்பலில் மாலுமியாகச் செயற்பட முடியாது என்று நழுவிக்கொண்ட தலைவர்கள் மத்தியில் அந்தக் கப்பலை நான் எப்படியாவது கரை சேர்ப்பேன் என்று பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணிலின் தைரியத்தைப் பாராட்டுகின்றேன். அத்தோடு இந்த நாடு அவருக்கு என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எடுக்கப்பட்ட தீர்மானங்களிலே எங்கே தவறிழைத்திருக்கின்றோம் என்பதை நாம் பார்க்க வேண்டும். அது குறித்த மறு பரிசீலனை அவசியம். அரச மற்றும் எதிர்த்தரப்புக்கும் இது அவசியம்.

வற் வரி இப்போது 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக உயர்த்தப்பட்டதற்கு எதிராக எதிர்த்தரப்பில் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். விலை இன்னும் அதிகரிக்கும் என்று உசுப்பேத்திக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதே அரசு வற் வரியை 8 வீதமாகக் குறைத்த போதும் கூட இந்த நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியைக் காணப்போகின்றது – வற் வரி குறைக்கப்பட்டது தவறு என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

மக்கள் நலனுக்காக அன்று வற் வரி குறைக்கப்பட்டபோது பாராட்டாத எதிர்த்தரப்பினர் இப்போது குறைகாண முயல்கின்றனர். அப்படிச் செய்தாலும் தப்பு; இப்படிச் செய்தாலும் தப்பு.

சமஷ்டி முறைமை உலகமெங்கும் இருக்கின்றது. சமஷ்டி என்கின்ற அழகிய வார்த்தை பல்வேறு இனங்கள் கொண்ட ஒரு தேசத்தை ஒற்றுமையாகச் சீர்செய்து கட்டமைத்து அதை அங்கீகரித்தல் ஆகும்.

அது ஒரு சிறந்த தீர்வு முயற்சி. அதனை வைத்துப் பெரும் பீதியையே இந்த நாட்டில் உருவாக்கினர். அதேபோல் ஒரு பீதி இன்று ஐ.எம்.எப். இற்கும் ஏற்பட்டிருக்கிறது.

1965 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 16 தடவைகள் ஐ.எம்.எப். உடன் இணைந்து செயற்பட்டிருக்கிறோம். ஆக , இந்த நாட்டில் இதுவொரு புதிய விடயமல்ல..

நாடு பொருளாதார மீட்சி பெற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *