யாருமே கவனிக்காத இலங்கையில் பிறந்த நடிகை சுஜாதாவின் இறப்பு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக சுஜாதா வலம் வந்தார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார். இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன. கே.பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் கதாநாயாகியாக வலம் வந்தவர், பின்னர் உறுதுணை கதாப்பாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர். சுஜாதா. முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார், இரு குழந்தைகள் பிறந்தன.

திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்படுகிறது. எப்படி? யாரால்? அந்த வேலியை மீறி சுஜாதாவால் ஏன் வர முடியவில்லை? இதற்கெல்லாம் சுஜாதாவின் மரணம் வரை பதில் கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை.

ஒருகட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும், ஷூட்டிங் விஷயங்களைத் தெரிவிப்பதுமே பெரிய சவாலாக இருந்திருக்கிறது. இவரின் இருப்பே அடிக்கடி மர்மமாகிவிடும் அந்த அளவுக்கு இவரிடம் எளிதில் பேசுவதும் நெருங்குவதும் சினிமா துறையினருக்கே சவாலான காரியமாகியிருக்கிறது.

ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறார் எனவும் அவர் மீது சுமை உள்ளது என பலருக்கும் தெரிந்தது. ஆனாலும் அவரின் சுமையை இறக்கிவைக்கும் வடிகாலாக யாராலும் இருக்க முடியவில்லை. அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

2011-ம் ஆண்டு அவர் காலமான சமயத்தில் தமிழகச் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால், சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா தொடர்கதையாகவே முடிந்துவிட்டது தான் சோகம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *