போராட்டக்காரரின் கோரிக்கையும் எக்காளமிடும் ராஜபக்சக்களும்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில், இலங்கையின் அரசியல் களமும், போராட்டக் களமும் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“ஜனாதிபதி பதவியைத் துறந்தமையால் கோட்டாபய ராஜபக்ச விடுபாட்டுரிமையை – சிறப்புரிமையை இழந்துள்ளார். அவரை நீதியின் முன்நிறுத்தவேண்டும்” என்று கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தவர்களில் ஒருவரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நாடும் தயாரில்லாத காரணத்தால்தான் அவர் நாடு திரும்பினார் என்று தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின் அவர் மறைந்திருப்பதற்கு எங்கும் இடமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 மில்லியன் மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியமைக்காக அவரைக் கைது செய்யவேண்டும் என்றும், அவர் இழைத்த குற்றங்களுக்காகத் தண்டிக்கவேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையால் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும், தற்போது அவர் சிறப்புரிமையை இழந்துள்ளமையால் அந்த வழக்குகளில் அவர் மீளவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “கோட்டாபய ராஜபக்ச, நாட்டைவிட்டுத் தப்பியோடவும் இல்லை. அவர் விரட்டியடிக்கப்படவும் இல்லை” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து இலங்கையைவிட்டுத் தப்பியோடி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த நிலையில் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி அலைந்து திரிந்த கோட்டாபய ராஜபக்‌ச மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே அவரின் சகோதரனான பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாட்டில் சில தரப்புக்களின் சதி முயற்சியால் திடீரென எழுந்த கொந்தளிப்பு நிலைக்குத் தீர்வுகாணவே கோட்டாபய ராஜபக்ச சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.

நாட்டில் தற்போது அமைதி நிலவுவதால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார்.

அவர் இலங்கைப் பிரஜை. ஒரு முன்னாள் ஜனாதிபதி. இந்நிலையில், அவர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

நாடு திரும்பியுள்ள அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அரசு வழங்குகின்றது.

அவர் விரும்பினால் மீண்டும் ‘மொட்டு’க் கட்சி ஊடாக அரசியலுக்குள் நுழையலாம். இது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்” – என்று பஸில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ராஜபக்சக்களின் மீளெழுச்சி விரைவில் நடக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ளமை ராஜபக்சக்களின் மீளெழுச்சிக்கு வழிவகுக்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே அவரின் சகோதரரான மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

“ராஜபக்சக்கள் தோற்கவும் இல்லை,தோற்கடிக்கப்படவும் இல்லை. சுயமாகப் பதவிகளிலிருந்து விலகிய அவர்கள் விரைவில் மீளெழுச்சி பெறுவார்கள்.

எதிரணியினர் ராஜபக்சக்களைக் கண்டபடி வசைபாடுகின்றனர்; குறைத்து மதிப்பிடுகின்றனர். ராஜபக்சக்களின் அருமையும், திறமையும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றாகப் புரியும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளால் ராஜபக்சக்களின் அரசியலுக்கு முடிவுகட்ட முடியாது.

தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ராஜபக்சக்களினதும் ‘மொட்டு’க் கட்சியினரினதும் கைகள் மீண்டும் ஓங்கும். அந்தத் தேர்தலில் எதிரணியினர் வழமை போன்று தோல்வியையே தழுவுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதை நான் வரவேற்கின்றேன். தனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் சிறந்த முடிவை எடுப்பார்” – என்றும் மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

– அரியகுமார் யசீகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *