சிறந்த விவசாயி விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

கேரள அரசின் சிறந்த விவசாயி விருது பெற்றுள்ள நடிகர் ஜெயராம், “பத்மஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி வரும் சூழலில், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் பலரும் ஒயிட் காலர் ஜாப்களைத் தேடும் நிலை உருவாகி வருகிறது.

இதனால் எதிர்காலச் சந்ததி பெரும் உணவுப் பிரச்சினையை சந்திக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். எனவே, தன்னார்வலர்கள் பலர் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பல நடிகர்களும் இருப்பது பாராட்டுதலுக்குரிய விசயம். அப்படிப் பாராட்டுகளுக்கு பொருத்தமானவர்களில் ஒருவர் தான் பிரபல நடிகர் ஜெயராம்.

சினிமாவில் நடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டாலும், தங்களது ஆத்ம திருப்திக்கென விவசாயத்தில் ஈடுபடும் நடிகர்களில் ஜெயராம் குறிப்பிடத்தக்கவர்.

80, 90 களில் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது அம்மா ஒரு தமிழர், கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.

எனவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.

தற்போதும் நாயகன், துணை நடிகர், வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என தனது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது மகன் காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிகராக உள்ளார்.

56 வயதாகும் ஜெயராம், நடிப்பைத் தாண்டியும் பன்முகக் கலைஞராக திகழ்ந்து வருகிறார். செண்டை மேளத்தை முறைப்படிக் கற்று பட்டம் வாங்கியவர் ஜெயராம். மிமிக்ரி கலைஞார், பின்னணிப் பாடகர் எனக் கலைத்துறையில் பலகலை வித்தகரான இவர், மிகச் சிறந்த விவசாயியும் ஆவார்.

இவர் எர்ணாகுளம் அருகே தனது சொந்த ஊரான பெரும்பாவூர் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுப் பண்ணையை நடத்தி வருகிறார். தனது பண்ணைக்கு ’ஆனந்த்’ எனப் பெயர் வைத்துள்ளார் ஜெயராம்.

ஜெயராமின் முன்னோர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்தவர்கள் ஆவர். அதை அவர்கள் பெருமையாக நினைத்தனர். ஜெயராமின் மாமா மலையாட்டூர் ராமகிருஷ்ணன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாட்டுத் தொழுவத்தையொட்டிய அறையில்தான் தங்கியிருந்து படித்துள்ளார். ஜெயராமும் விரும்பித் தங்கும் இடமாக அந்த அறை இருந்துள்ளது.

எனவே, சிறுவயதில் இருந்தே ஜெயராமுக்கும் விவசாயத்தின் மீது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. தனது முன்னோர்களைப் போல, தானும் சிறந்த விவசாயியாக வேண்டும் என ஆசைப்பட்டுத்தான், கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் இந்த ஆனந்த் பண்ணையை அவர் ஆரம்பித்தார்.

5 மாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தி, தற்போது அதை ஒரு முன்மாதிரி பண்ணையாக செயல்படுத்திக் காட்டியுள்ளார். இப்போது 8 ஏக்கர் நிலத்தில் 60-க்கும் மேற்பட்ட பசுக்களை தன் பண்ணையில் அவர் வளர்த்து வருகிறார்.

நடிப்பைப் போலவே, இந்த விவசாயப் பணிகளுக்காகவும் அடிக்கடி ஊடகங்களில் பேசப்பட்டு வந்தார் ஜெயராம். இந்நிலையில், ஜெயராமின் இந்தப் பணிகளை கௌரவிக்கும் வகையில், அவருக்கு ’சிறந்த விவசாயி’ எனும் விருதை வழங்கியுள்ளது கேரள அரசு.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநில விவசாயத் துறை சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விவசாய தின விழாவில்,  கேரள முதல்வர் பினராயி விஜயன் கையால் இந்த விருதைப் பெற்றார் ஜெயராம்.

அப்போது மேடையில் பேசிய ஜெயராம்,

“பத்ம ஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார். மேலும், “பண்ணையைத் தூய்மையா வெச்சிப்பேன். அதேநேரம் மாடுகளுக்கு அதீத கவனிப்பு கொடுத்து வந்தேன். இதனாலயே என் பண்ணை முன் மாதிரியாக விளங்கியது,” என்று பெருமிதத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.

தான் விருது பெற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜெயராம். அதில், தனக்கு விருது வழங்கிய கேரள முதல்வருக்கும், கேரள அரசுக்கும் தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த விவசாயி விருது பெற்ற ஜெயராமுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும், விவசாய ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் இதுபோல் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம், இளம் தலைமுறையினருக்கும் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது என ஜெயராமுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயராம், பத்மஸ்ரீ விருது, இரண்டு முறை கேரள மாநில விருது, ஒரு தமிழக மாநில விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள் என ஏகப்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *