திருமணத்திற்கு  நண்பர்கள் வராததால் வேலையை இராஜினாமா செய்த பெண்!

தன் திருமணத்துக்கு அலுவலக நண்பர்கள் வராததால், சீன பெண் ஒருவர் மனவிரக்தியில் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

பொதுவாகவே திருமணம் என்றால் மணமக்கள் தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களை திருமணத்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்றாகும். அப்படி திருமணத்துக்கு அழைக்கப்படுபவர்கள் வராமல் போகும்பட்சத்தில் அழைத்தவர்களின் மனம் நொந்து போகும். அந்த வகையில் தன் திருமணத்துக்கு அலுவலக நண்பர்கள் வராததால், சீன பெண் ஒருவர் மனவிரக்தியில் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அலுவலக நண்பர்கள் 70 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். “கட்டாயம் வந்துவிடுவோம்..!” என அந்தப் பெண்ணிடம் உறுதியாகக் கூறியிருக்கின்றனர் அவரின் அலுவலக நண்பர்கள். ஆனால், இளம்பெண்ணின் திருமணத்தின்போது அவர் அழைத்த 70 அலுவலக நண்பர்களில் ஒரேயொருவர் மட்டுமே வந்திருக்கிறார்.

ஒரு சிலரை மட்டும் திருமணத்துக்கு அழைத்தால்.. மற்றவர்கள் மனவருத்தப்படுவார்கள் என்பதால் அலுவலகத்தில் பணிபுரியும் 70 பேரையும் அழைத்திருக்கிறார் அந்த இளம்பெண். ஆனால், அழைத்தவர்களில் ஒரேயொருவர் மட்டுமே தன்னுடைய திருமணத்தில் கலந்துகொண்டது அவரை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. மேலும், திருமணத்தின்போது அலுவலக நண்பர்கள் 70 பேருக்கு சேர்த்து ஆர்டர் செய்யப்பட்ட உணவும் மீதமாகியிருக்கிறது.

இதனால், மனமுடைந்து போன இளம்பெண் திருமணம் முடிந்து அடுத்தநாளே கையில் ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு பறந்திருக்கிறார். அங்கு உயரதிகாரியிடம் அந்தக் கடிதத்தை கொடுத்த அவர், “நான் இனியும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்பவில்லை” எனக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *