விவாகரத்து வழக்கு முடிந்த சில நிமிடங்களில் மனைவியை கொலை செய்த கணவர்!

விவாகரத்து வேண்டாம் எனக் கூறி மீண்டும் இணைந்து வாழ்வதாக முடிவெடுத்த சில நிமிடங்களில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருமணமாகி 7 வருடங்கள் கடந்திருந்த சிவகுமார் – சைத்ரா தம்பதி, விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். கர்நாடகாவின் ஹொலெநரசிபுரா நீதிமன்றத்தில் இதற்காக கவுன்செலிங் மேற்கொண்டு வந்தனர். கடைசியாக கவுன்செலிங் முடித்த இருவரும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை கடந்து, இணைந்து வாழலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இப்படி முடிவு செய்து நீதிமன்றத்திலிருந்து வெளி வந்த சில வினாடிகளிலேயே சிவகுமார் சைத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கவுன்செலிங் முடிந்து கழிவறைக்கு சைத்ரா சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற சிவகுமார், அங்கு அவரை மறைத்துவைத்திருந்த கத்தியினால் கழுத்தை அறுத்துள்ளார்.

அங்கிருந்து தப்பிக்க முயன்ற சிவகுமாரை மக்கள் சுற்றிவளைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சைத்ராவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்றுவந்த சைத்ரா அதிக ரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்தார்.

கொலை செய்த குற்றத்திற்காக சிவக்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகுமார் எப்படி ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவந்தார் எனவும், இணைந்து வாழ முடிவெடுத்த பின்னர் கொலை செய்யும் அளவிற்கு மனதை மாற்றிய காரணம் என்னவென்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *