இன்று நள்ளிரவு முதல் QR fuel pass முறையில் மாற்றம்

அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள்அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல கைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, http://fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, வணிக பதிவு எண் (BRN) வகையின் கீழ், முதலாவது வாகனத்தைப் பதிவு செய்யலாம்.

அதன்பின் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணின் சுயவிவரத்தில் உள்நுழைந்து, ‘Add’ என்பதை அழுத்துவதன் மூலம் தமது வணிகத்துக்குரிய மேலும் பல வாகனங்களை சேர்க்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு மிக விரைவில் பதிவு செய்யுமாறும், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பெறுவதற்கு, முறையற்ற விதத்தில் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் வலுசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR fuel pass – முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது.

கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் QR fuel pass முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்தது.

இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை சரிபார்த்து, உரிய முறைக்கு புறம்பாக எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *