சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு குவியும் பாராட்டுக்கள் அதிரவைக்கும் தகவல்!

இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் தாக்கப்பட்டதை அடுத்து, அவரை தாக்கிய நபருக்கு ஈரானிய செய்தித்தாள்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேடையில் உரையாற்றிக் கொண்டு நின்றிருந்தபோது, மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரால் பேச முடியவில்லை என்றும், கண் பார்வையை இழக்ககூடும் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ஈரானிய செய்தித்தாள்கள் சனிக்கிழமையன்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கி காயப்படுத்திய நபருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.

இதுத் தொடர்பாக ஈரானின் கய்ஹான் செய்தித்தாள் வெளியிட்ட குறிப்பில், நியூயார்க்கில் விசுவாச துரோகி மற்றும் தீய சல்மான் ருஷ்டியைத் தாக்கிய துணிச்சலான மற்றும் கடமையுள்ள மனிதருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து இருந்தது.

மேலும் கடவுளின் எதிரியின் கழுத்தை கிழித்த மனிதனின் கையை முத்தமிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதையடுத்து கொராசன் நாளிதழ் வெளியிட்ட தலைப்பை “நரகத்திற்குச் செல்லும் வழியில் சாத்தான்” என குறிப்பிட்டு இருந்தது.

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988-ல் வெளியிட்டார், நாவலின் உள்ளடக்கங்கள் முகமது நபியை சித்தரித்ததால் ஈரான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் கோபமடைந்தன, மேலும் உலகளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் ஈரானிய மத அமைப்பு சுமார் 3.3 மில்லியன் டொலர்களை சல்மான் ருஷ்டியின் தலையை துண்டிப்பதற்கான வெகுமதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சல்மான் ருஷ்டியைத் தாக்கிய கழுத்தில் கத்தியால் குத்திய நியூஜெர்சியில் உள்ள பேர்வியூவைச் சேர்ந்த 24 வயதுடைய ஹாடி மாதர் என்ற சந்தேக நபரை நியூயார்க் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *