ரஜினியுடன் மீண்டும் இணையும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்!

23 வருடங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் ஜெயிலர். அனிருத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகளை பெரிதாக படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த செய்தி வெளியானது முதல் குஷியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். காரணம், 23 வருடங்களுக்கு பின்னர், தற்போது தான் மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

இதற்கு முன்னர் இருவரும் இணைந்து நடித்த படம் படையப்பா. அதில் நீலாம்பரியாக மிரட்டியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். தன் மனம் கவர்ந்த எந்த ஒரு பொருளும் தன்னுடையது மட்டும் தான் என்ற திமிர், தன் முடிவுக்கு எதிர் முடிவை யாரும் கூறக்கூட தயங்க வைக்கும் ஆதிக்கம். கண்களாலேயே எதிர் நிற்பவரை நடுங்கச்செய்யும் பார்வை என நீலாம்பரி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெண் கதாப்பாத்திறமாக திகழ்கிறது.

அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் பார்த்து வியக்கும் வில்லி பாத்திரம் ஒன்று எந்த படத்திலும் இடம்பெறவில்லை. தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரம் என்றால் அதற்கு பெஞ்ச் மார்க் நீலாம்பரி தான்!

வில்லி ரோலில் பல முன்னணி நடிகைகள் நடித்துவிட்டபோதிலும், நீலாம்பரியின் சாயல், ஸ்டைல் என ஏதோ ஒன்று அந்த கதாபாத்திரத்தில் ஒளிந்திருக்கும்.

முக்கியமாக அன்று உச்ச நட்சத்திரமாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லியாக நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! சத்யராஜ், ரகுவரன் போன்ற வில்லனிசத்துக்கு பெயர் பெற்ற நடிகர்கள் அவர்களது பாணியில் கோலோச்சியிருந்த சமயத்தில், ஒரு பெண் எதிராளி என்ற விஷயமே பெரிய மாற்றாக பார்க்கப்பட்டது.

எதிர்த்து சண்டைப்போட இருவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், ரஜினிக்கு இணையாக தன் டயாலாக்குகளால் கலக்கியிருப்பார் நீலாம்பரி. இந்த கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் கொடுத்த உழைப்பு, ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்ய மட்டும் தான் நடிகைகள் பயன்படுவார்கள் என்ற பார்வையையும் மாற்றியமைத்தது.

இத்தனை ஆழமாக ரசிகர்கள் மனதில் குடியிருக்கும் நீலாம்பரி மீண்டும் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் இணைகிறார். மேலும் இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *