கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் முதலாவது தேங்காய் உடைப்பு!

– ரணிலைச் சாடுகின்றார் சி.வி.கே.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் பத்தாவது தேசிய மாநாடு அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தனர் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக்கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார். அந்தளவுக்குக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும். எல்லோரையும் அணைத்துச் செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியைத் தொடர்வார்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *