வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரி விலக்கு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வரி விலக்கை 1,750 அமெரிக்க டொலர்களில் இருந்து 6,550 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், 20,000 அமெரிக்க டொலர்கள் முதல் அதிகபட்சம் 65,000 டொலர்கள் வரை அவர்கள் அனுப்பியிருந்தால் மின்சார கார் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வங்கி வழிகள் மூலம் அந்நிய செலாவணியை செலுத்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாணயக்கார, நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த இக்கட்டான நேரத்தில் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணத்தின் மூலம் குறிப்பிட்ட கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு டொலர்களை பெற்றுக்கொள்ள முடிந்ததை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட பணத்தின் அளவு குறைந்துள்ளது, ஆனால் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்தப் பணத்தால் எண்ணெய், எரிவாயு, மருந்து வாங்க முடிந்தது.

எனவேதான் நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க உங்களால் இயன்ற ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம் என்றார்.

சிலர் உண்டியல், ஹவாலா போன்ற முறைகள் மூலம் பணம் அனுப்பினாலும், நாட்டை நேசிக்கும் மக்கள் தங்கள் டொலர்கள், யென் மற்றும் தினார்களை வங்கிகள் மூலமாகவே அனுப்பி வைத்தனர்.

அந்த டொலர் கையிருப்பைக் கொண்டு இந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

எனவே, அமைச்சரவையின் பூரண இணக்கப்பாட்டுடன் எமது அமைச்சு, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பன ஒன்றிணைந்து பணப்பரிமாற்றத்தை அதிகரிக்குமாறு அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *