ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பு எம்.பிக்கள் யார்?

“நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது நேரடியாகத் தெரிவித்தார்.

இந்தத் தகவலைக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“பேச்சின் முடிவில் கடைசியாக பெரிய குண்டு ஒன்றை ஜனாதிபதி தூக்கிப் போட்டு இருக்கின்றார். இறுதியில் முடிவுரை சொல்லும்போது நான் ஒரு விடயத்தைக் கூறினேன். “நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், நீங்கள்தான் ஜனாதிபதி. அந்த ஜனாதிபதிப் பதவியில் இருப்பவருடன்தான் நாங்கள் பேச வேண்டும்” என்று நான் கூறத் தொடங்கியதுமே அவர் (ஜனாதிபதி) குறுக்கிட்டார். “இல்லை, நீங்கள் எல்லோரும் எனக்கு வாக்களிக்காமல் விடவில்லை” என்று உறுதியாகச் சொன்னார் அவர்.

அப்போது நான், “இல்லை, நாங்கள் தீர்மானித்து, தீர்மானம் எடுத்து, அதன்படிதான் பத்துப் பேரும் வாக்களித்தோம்” என்றேன். அப்போதும் அவர் மீளவும் குறுக்கிட்டு “இல்லை, இல்லை. உங்களில் சில பேர் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்துள்ளீர்கள்” என்று சொன்னார்.

“அப்படித்தான் ஹரீன் பெர்னாண்டோவும் கூறியிருக்கின்றார். நீங்களும் இப்போது கூறுகின்றீர்கள்” என்று எங்களில் ஒருவர் கூற, “ஆமாம். அது சரிதான்” என்றார் ஜனாதிபதி.

அப்போது சித்தார்த்தன் குறுக்கிட்டு “அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நாங்கள் அளித்தது இரகசிய வாக்கெடுப்பு அல்லவா?” என்று கேட்டார். “அது எனக்குத் தெரியும். யார், யார் வாக்களித்தனர் என்ற விவரம் என்னிடம் உள்ளது. கூட்டமைப்பில் மாத்திரமல்ல ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் எனக்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற பட்டியலும் என்னிடம் உள்ளது” என்றார் ஜனாதிபதி.

இது ஒரு சீரியஸான விடயம். வாக்களிப்பு முடிந்ததும் ஹரீன் பெர்னாண்டோ, எங்களில் (கூட்டமைப்பில்) ஐந்து பேர் மாறி வாக்களித்தனர் என்று கூறியிருந்தார். அப்படி இருக்க முடியாது என்று நான் சொன்னேன். ஆனால், ஜனாதிபதி இப்போது அடித்துக் கூறுகின்றார். ஆகவே, இது குறித்து நாங்கள் ஆழமாகச் சிந்தித்து ஆராய வேண்டும்” – என்றார்.

– அரியகுமார் யசீகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *