ஜனாதிபதி ரணிலை விசாரணைகளில் இருந்து விடுவிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டாயமாக விடுவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றில் எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று சமர்பித்த கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது, பிரதமராக பதவி வகித்தார். இதன்போது, அவர், அடிப்படை உரிமைகளை மீறிய தவறுகளுக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் 8ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அரசியல் அமைப்பின் 35ஆவது சரத்துக்கு அமைய, ஜனாதிபதியின் செயல்கள் மற்றும் புறக்கணிப்புகளை ஆராய உயர் நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும். இது 19ஆம் மற்றும் 20ஆம் அரசியல் அமைப்பு திருத்தங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி விக்ரமசிங்கவை விடுவிப்பது மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தின் 7 மற்றும் 8 ஆவது சரத்துக்களுக்கு நேரடியாக முரணானது என கொழும்பு பேராயர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்த மனுவின் விசாரணை இடம்பெற்றபோது, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக மனுவை முன்வைக்க முடியாது என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க, விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது. இதனை ஆட்சேபித்தே கர்தினால் இன்று தமது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *