கள்ளத் தொடர்பால் பிறந்த சிசுவை கொலை செய்து மறைத்த வைத்தியர் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்தார் கூறப்படும் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் தொடர்பான மரபணு பரிசோதனையைடுத்து குழந்தை தனக்கு பிறந்தது என்பதனை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் முன்னர் கடமையாற்றிய குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர், அம்பாறை பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்கு அமர்த்திய நிலையில் குறித்த பெண்ணுக்கு 2017 ஆம் ஆண்டில் ஆண் பிள்ளை ஒன்று பிறந்ததையடுத்து அதனை சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றில் வீசிய நிலையில் பணிப்பெண்ணுக்கு தொடர்ந்து இரத்தப் போக்கு காரணமாக அதே ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 31 ஆம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் பணிப் பெண்ணைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது குறித்த குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்தாகவும் வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடத்தியதாகவும் பின்னர் சிசுவை தான் கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்ததனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என வைத்தியர் தெரிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியையும் வைத்தியரின் இரத்த மாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மரபணு பரிசோதனையில் குறித்த வைத்தியரின் இரத்த மாதிரியும் சிசுவின் இரத்த மாதிரியும் ஒன்று எனவும் வைத்தியருக்கு பிறந்த குழந்தை என்பதும் பரிசோதனையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட அறிக்கையை அரச பகுப்பாய்வு திணைக்களம் பொலிஸாருக்கும் நீதிமன்றிற்கும் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து மட்டு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சந்திரகுமார தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்த தொடர் விசாரணையில் நேற்று (25) திங்கட்கிழமை, தற்போது கண்டி மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாறும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தனக்கு பிறந்த குழந்தை என மறைத்து குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பணிப் பெண் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *