கோட்டாவை விரட்டிவிட்டு ரணிலை ஜனாதிபதியாக்கிய போராட்டக்காரர்கள்!

போராட்டக்காரர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி, தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததே இறுதியாக செய்ததென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பலனாக ரணில் விக்ரமசிங்க பிரதமரானார். அதனைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தினால் பதில் ஜனாதிபதியாகவும், தற்போது ஜனாதிபதியாகினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இதுதான் இப்போது போராட்டக்காரர்கள் சாதித்துள்ள நிலைமையாகும். அதனால்தான் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கை அவரை விட மோசமான ஒருவரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வர மட்டுமே அனுமதிக்கும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்தினேன். இந்த இளைஞர் போராட்டக்காரர்கள் அதை உணரும் அளவுக்கு புத்திசாலித்தனமாக இல்லை.

போராட்டத்தின் விளைவாக உருவான பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பின்மை காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் 134 வாக்குகளைப் பெற முடிந்ததாக வீரவன்ச தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியில் செயற்படும் டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவினால் போராட்டத்தை அடக்கி தமது உயிரைப் பாதுகாக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அதனால்தான் 134 எம்.பி.க்கள் அவருக்கு வாக்களித்தனர். கொள்கையோ, உத்தியோ, நோக்கமோ இல்லாத போராட்டத்தின் விளைவாக, ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாத ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு போராட்டக்காரர்களை அடக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என தாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *