அலுவலகத்தில் ஊழியர்கள் ஓய்வெடுக்க தூங்கும் பெட்டி உருவாக்கிய நிறுவனம்!

ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் ஓய்வெடுக்கும் வகையில்  Kamin Box (கமின் பொக்ஸ்)    என்ற தூங்கும் பெட்டியை ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.

தூக்கமின்றி அதிகநேரம் பணிபுரிபவர்கள் ஏராளமான உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில் தமது ஊழியர்களின் நலன் கருதி ‘இடோகி  கொயோஜு ப்ளைவுட் கார்ப்பரேஷன்‘ என்ற நிறுவனம் இத் தூங்கும் பெட்டியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனமானது  அதிக நேரம் பணிபுரியும் நபர்கள் தங்களது வேலைகளுக்கு இடையே இந்த பெட்டிக்குள் சென்று குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின்  தகவல் தொடர்பு அதிகாரி சாகோ கவாஷிமா,”பணிநேரங்களில் குட்டித்தூக்கம் போட விரும்புபவர்களுக்கு இந்தப்பெட்டி தீர்வை வழங்குகிறது. ஜப்பானில் பெரும்பாலான பணியாளர்கள் குளியலறைக்கு சென்று கதவை தாழிட்டுக்கொள்வார்கள். உள்ளே அவர்கள் சிறிதுநேரம் தூங்கி எழுந்த பின்னர் தங்களது வேலைகளை தொடர்வார்கள். அது ஆரோக்கியமானதில்லை என்று நான் நினைக்கிறேன். வசதியான இடத்தில் தூங்குவது நல்லது” என்றார்.

மேலும் ”வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களுக்கு ஓய்வு கிடைக்க வேண்டும் ” எனக்கூறிய அவர்,”பல ஜப்பானியர்கள் இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்வதால் அவர்கள்  ஓய்வெடுப்பதற்கான வசதியான அணுகுமுறையாக இது காணப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இப் பெட்டிக்குள் ஊழியர்கள் நின்றபடி மாத்திரமே  தூங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *