ஜனாதிபதி ரணிலை விரட்டும்வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும்வரை போராட்டம் தொடரும் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றார்.  

இந்நிலையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் இன்று ஊடக  சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது போராட்டக்காரர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, 

நாடாளுமன்ற சூழச்சிமூலமே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம். மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மக்கள் விரட்டியடித்தை கையோடு அக்கட்சிக்கான மக்கள் ஆணையும் இல்லாமல்போய்விட்டது. பதவிகளுக்காகவும், ஊழல், மோசடிகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவுமே ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

2020 பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர். அவர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, அவரை விரட்டியடிப்பதற்கான போராட்டம் தொடரும். 

போராட்டக்காரர்களை அடித்து விரட்டலாம், அவர்களை கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என ரணிலும், அவருக்கு வாக்களித்தவர்களும் நினைக்கலாம். ஆனால் நாம் பின்வாங்கபோவதில்லை. 

தற்போதைய நாடாளுமன்றம், மக்கள் அபிலாஷைகளை பிரதிபலிக்கவில்லை என்பது இன்றும் நிரூபனமானது. எனவே, யாராவது வந்து, நாடாளுமன்றத்துக்கு தீ மூட்டினால், எம்மை கைது செய்ய வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *