தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகிக்க தயார் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், மற்றைய கப்பலில் 41 ஆயிரம் மெற்றிக்தொன்னும் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன. அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்துவரும் கப்பல்களில் எரிபொருள் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் கட்டணங்களை செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. கப்பல் கட்டணத்தில் 30 வீதம் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய கட்டணத்தை செலுத்த தயாரென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 22ம் திகதி மேலும் 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் பிரிதொரு கப்பல் எதிர்வரும் 21ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இதற்கமைய அடுத்த வாரம் மொத்தமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், 70 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பெற்றோலும் கிடைக்;கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 90 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் கப்பல் நாட்டுக்கு வர தயாராகியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமன்றி சகலருக்கும் டீசல் விநியோகிக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *