இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி!

இலங்கையில் அந்நிய செலாவணி, எரிபொருள் கையிருப்பு இல்லாததால், பள்ளிகளை ஒரு வாரம் மூடும்படி எரிசக்தி துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இலங்கை அரசு 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நிய செலாவாணி, எரிபொருள் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக் கிடக்கிறது. இலங்கையின் எரிபொருள் பிரச்னையை சமாளிக்க இந்தியா 4 முறை பெட்ரோல், டீசல் அனுப்பி உள்ளது. இந்தியாவைத் தவிர்த்து வேறெந்த நாட்டிடம் இருந்தும் பெரிய அளவில் உதவிகள் கிடைக்காததால், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. குறிப்பாக, எரிபொருள் கையிருப்பு வெகுவாக குறைந்த நிலையில், புதிதாக பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்ய அந்நிய செலாவணி இல்லாமல் இலங்கை அரசு திண்டாடுகிறது.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், அடுத்த ஒருவாரத்திற்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் குறைந்த அளவே அலுவலகத்திற்கு வரவும், மற்றவர்களும், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் விஜேசேகர அளித்த பேட்டியில், “தற்போது 12,774 டன் டீசல் மற்றும் 4,061 டன் பெட்ரோல் மட்டுமே இருப்பு உள்ளது. இதைக் கொண்டு நாட்டின் ஒருநாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் மத்திய வங்கி 4,480 கோடி (125 மில்லியன் டாலர்) மட்டுமே விடுவித்துள்ளது. இதனைக் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த கச்சா எண்ணெய் இம்மாதம் 22 அல்லது 23ம் தேதிதான் கிடைக்கும்,’’ என்று தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் இல்லாமல் நாடு முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் வெறும் 1000 பஸ்களே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் வாங்க பங்குகளில் மக்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். இனிவரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் இலங்கை மக்கள் பெரிதும் தவிக்கின்றனர்.

கரும்புலிகள் தின குண்டு மிரட்டல்: புலிகளின் தற்கொலைப்படையான கரும்புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி கடைபிடிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு மாகாணங்களில் கரும்புலிகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் இன்று அல்லது நாளை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செயலர் கமல் குணரத்னே கடந்த 27ம் தேதி போலீஸ் தலைமை விக்ரமரத்னவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான தகவல்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுர குமார திசநாயக்க அரசை வலியுறுத்தி உள்ளார்.

இளைஞரை உதைத்த ராணுவ அதிகாரி: இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கான கூட்ட நெரிசலை தவிர்க்க, டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், குருனாகல, யக்கஹபிட்டிய ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த இளைஞர், தவறுதலாக வரிசை மாறியதை கண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரி கர்னல் விராஜ் குமாரசிங்க அவரை காலால் எட்டி உதைத்தார். அங்கு ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பல இடங்களில் பங்குகளில் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது….

நன்றி: தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *