இஸ்ரேலியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அல் ஜசீரா பெண் ஊடகவியலாளர்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 

பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், கடந்த மே 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இது தொடர்பான செய்தியை சேகரிக்க அப்பகுதிக்கு கத்தாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா சென்றிருந்தார். 

அப்போது, அங்கு இஸ்ரேல் படையினருக்கு பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டின்போது செய்தி சேகரிக்க சென்ற ஷெரீன் அபு அல்லெஹா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷெரீன் அபு அல்லெஹா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டிலேயே அல் ஜசீரா செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு நடத்திய சுயேட்சை ஆய்வில், ஷெரீன் உயிரிழக்க காரணமான துப்பாக்கிச்சூடு இஸ்ரேலிய பாதுகபபு படையில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ரவீனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *