வாழ்க்கையை புரட்டி போட்ட ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை ஆடை விற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர்!

ஐபிஎல் சூதாட்டம், புக்கிஸ்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் பெற்றது, பாலியல் புகார் உள்பட பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரௌஃப், தற்போது லாகூர் பஜாரில் பழைய துணிகள் மற்றும் காலணிகள் விற்கும் கடை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1956-ம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் பிறந்தவரான ஆசாத் ரௌஃப், தனது இளம் வயது முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார். பின்னர் 1998-ம் ஆண்டு முதல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்து வந்தநிலையில், 2000-ம் ஆண்டு உள்நாட்டில் நடைபெற்ற பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையேயான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நடுவராக அறிமுகப்படுத்தப்பட்டார் ஆசாத் ரௌஃப்.

இதன்பிறகு பாகிஸ்தான் நடுவராக இருந்த அலீம் தார் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஐ.சி.சி. இவரை சர்வதேச போட்டிகளுக்கான நடுவராக 2005-ம் ஆண்டு நியமித்தது. இதனையடுத்து சர்வதேச போட்களின் நடுவராக உயர்ந்து, பாகிஸ்தானையும் தாண்டி மற்ற நாட்டுப் போட்டிகளுக்கும் நடுவராக செயல்பட ஆரம்பித்தார் ஆசாத் ரௌஃப். சர்வதேச நடுவராக இவரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால், அடுத்ததாக ஐ.சி.சி எலைட் பேனல் நடுவர் குழுவில் சேர்க்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

இதனால் ஐபிஎல் போட்டிகளிலும் நடுவராக ஆசாத் ரௌஃப் பணியாற்ற ஆரம்பித்தார். இவ்வாறு அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்தநிலையில்தான், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியான ஐபிஎல் ஆட்டத்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையே அஸ்தமனமாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய போது, சில புக்கிஸ்களிடமிருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார் ஆசாத் ரௌஃப்.

இதையடுத்து ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழுவில் இருந்து ஆசாத் ரௌஃப்-ஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது. மேலும் சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் மும்பை காவல்துறையால் ஆசாத் ரௌஃப் மீது எழுப்பப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. ஆனால் இதனை மறுத்த ஆசாத் ரௌஃப் விசாரணைக்காக இந்தியா வர மறுத்துவிட்டார். வழக்கு விசாரணையின் முடிவில் மும்பை நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி, பி.சி.சி.ஐ., கடந்த 2016-ம் ஆண்டு ஆசாத் ரௌஃப்-க்கு ஐந்தாண்டுகள் தடை விதித்தது. இதற்கிடையில் கடந்த 2012-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகை ஒருவர், ஆசாத் ரௌஃப் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகவும், அதன்பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்தப் புகாரையும் மறுத்திருந்தார் ஆசாத் ரௌஃப்.

இதன்பிறகு இவரைப் பற்றிய செய்திகள் ஏதும் வெளிவராதநிலையில், தற்போது லாகூர் நகரில் அமைந்திருக்கும் பிரபலமான லாண்டா பஜாரில் சொந்தமாக துணி மற்றும் காலணிகள் அடங்கிய கடையை வைத்து ஆசாத் ரௌஃப் வியாபாரம் செய்து வருகிறார் என்கின்ற செய்தி பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த டிவிக்கு 66 வயதான ஆசாத் ரௌஃப் அளித்த பேட்டியில், “என் வாழ்க்கையில் நான் பல கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளேன். இப்போது என்னைப் பார்க்க யாரும் இல்லை. கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுடன் தொடர்பில் இல்லை. ஏனென்றால் நான் எதையாவது விட்டுவிட்டால், அதை முழுவதுமாக விட்டுவிடுவேன்.

2013-ம் ஆண்டு வந்த இந்த சிக்கல்களுக்கு முன்னதாக, எனது நேரத்தை சிறந்தமுறையில் நான் ஐபிஎல்லில் செலவிட்டு கொண்டிருந்தேன். இந்த விவகாரங்களில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. பிசிசிஐ தரப்பிலிருந்துதான் என்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் அவர்களே என் மீதான நடவடிக்கை குறித்தும் முடிவெடுத்தனர்.

மேலும் 2012-ம் ஆண்டு மும்பை மாடல் அளித்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், அடுத்த ஐபிஎல் சீசனில் நடுவராக தான் நான் இருந்தேன். ஐசிசி கேட்டுக்கொண்டதற்காகத் தான், நான் எனது நடுவர் வாழ்க்கையை துவங்கினேன். ஆனால் ஐபிஎல் 6-வது சீசனில் என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் எனது வாழ்க்கை தடம் புரண்டது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லாகூரில் உள்ள லாண்டா பஜார் என்பது மலிவு விலையில் ஆடை, காலணிகள் மற்றும் பல பொருட்கள் கிடைப்பதில் பிரபலமானது. செகண்ட் ஹேண்ட் பொருட்களின் விற்பனை இங்கு நடைபெறுவது வழக்கம். அங்குதான் ஆசாத் ரௌஃப் தனது இரண்டு கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்தக் கடை தனது சம்பாத்தியத்துக்காக வைத்திருக்கவில்லை என்றும், தனது ஊழியர்களின் பண தேவைக்காக தான், இந்தக் கடையை வைத்துள்ளதாகவும் ஆசாத் ரௌஃப் கூறியுள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013- ம் ஆண்டு வரை 170 சர்வதேசப் போட்டிகளில் ஆசாத் ரௌஃப் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 49 டெஸ்ட், 98 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *