ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர்!

ஒரு மனித உடலுக்கு 6 – 8 மணி நேரத் தூக்கம் தேவை. பச்சிளங் குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 12 – 14 மணி நேரம் தூங்குவர். வயதானவர்கள் 8 – 10 மணி நேரம் உறங்குவர். ஆனால் இங்கு ஒரு மனிதர் 20 – 25 நாட்கள் தொடர்ந்து தூங்குகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நகுர் (Nagaur) மாவட்டத்தைச் சேர்ந்த புர்காராம் என்பவர்தான் அந்த அதிசய மனிதர். 42 வயதாகும் இவருக்கு ஆக்ஸிஸ் ஹப்பர் சோம்னியா (Axis hypersomnia) என்கிற அரிதான நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு மிக அதிகமாகத் தூக்கம் வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள பத்வா கிராமத்தைச் சேர்ந்த புர்காராமுக்கு, சக மனிதர்களைப் போல வேலை பார்க்க முடியாது. பல் விலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது போன்ற பணிகளைச் செய்வதற்குக் கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரை குளிப்பாட்டுவது, அவருக்கு உணவு ஊட்டிவிடுவது எல்லாம் செய்து வருகிறார்கள்.

ஒரு சராசரி மனிதனால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தொடர்ந்து தூங்க முடியாது. ஆனால் புர்காராமால் தொடர்ந்து 25 நாட்களுக்கு உறங்க முடியும் என இந்தியா டைம்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவரை நிஜ கும்பகர்ணன் என்று அழைத்து கேலி செய்கிறார்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் பத்வா கிராமவாசிகள்.

ஆரம்பத்தில் எல்லோரையும் போல 6 – 8 மணி நேரம் தூங்கி எழுந்து கொண்டிருந்த புர்காராமின் தூக்கம், நாளடைவில் நாள் கணக்கில் நீண்டது. தற்போது வாரக் கணக்கில் (3 – 4 வாரம்) தொடர்ந்து தூங்குகிறார் புர்காராம்.

இரவில் ஆடையின்றி தூங்குபவரா நீங்கள்? – இந்தக் கட்டுரையை படித்துவிடுங்கள்
அவருக்கு 23 வயது இருக்கும் போது இப்படி ஒரு அரிய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புர்காராமின் இந்த நோயால், அவரது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிழைப்புக்காக ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். மாதத்துக்கு ஐந்து நாட்கள் மட்டும் தான் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறாராம். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட புர்காரம் அப்படியே தூங்கிவிடுவார் என்றும் சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மருத்துவச் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், அவருக்கு உடல் எப்போதும் சோர்வாக இருப்பதாகக் கூறுகிறார் புர்காராம். அது போல அவருக்கு கடும் தலைவலி வேறு வருகிறதாம்.

புர்காராம் விரைவில் குணமடைந்து ஒரு சகஜமான வாழ்கையை வாழ்வார் என்கிற நம்பிக்கையில் அவரது மனைவி லக்ஷ்மி தேவி மற்றும் அவரது தாய் கன்வாரி தேவி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *