வளர்ப்பு நாயின் செயலால் ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு வளர்ப்பு நாயின் செயலால் லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்துவரும் லியோனர்ட் லிண்டன் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
அந்த நாய்க்கு லிவி என்று பெயர்சூட்டியுள்ள லிண்டன் அதனை வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதுகிறார்.

இந்நிலையில், அவரது நாய் கர்ப்பமடைந்திருக்கிறது. எப்போதும் அதனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்த லிண்டனுக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்திருக்கிறது.
வெளியே சென்றிருந்த லிண்டனுக்கு போன் செய்த அவரது குடும்பத்தினர் லிவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக
தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த லியோனர்ட் வீடு திரும்ப முடிவெடுத்துள்ளார்.
பதற்றம் காரணமாக எப்போதும் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த அவர், சாலை ஓரத்தில் அமைந்திருந்த கடையை பார்த்ததும் தனது நாய்க்கு ஏதாவது வாங்கிச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்.
இதனால் காரை பார்க் செய்துவிட்டு கடைக்கு உள்ளே சென்ற லிண்டன் சில பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அங்கு இருந்த லாட்டரி டிக்கெட் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், வீடு திரும்பிய லிண்டன் தனது செல்ல நாயை கவனித்துக்கொள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து தான் வாங்கிய லாட்டரிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 15.6 கோடி ரூபாய்) பரிசுத்தொகை கிடைத்திருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.