இறந்து 18 மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட தம்பதி!

அயர்லாந்தில் வயதான பிரித்தானிய தம்பதியினர், இறந்து 18 மாதங்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதிகளான 81 வயதான நிக்கோலஸ் ஸ்மித்  மற்றும் அவரது மனைவி 79 வயதான ஹிலாரி ஸ்மித் இருவரும் பிரித்தானிய ஓய்வூதியம் பெறுபவர்கள்.அவர்கள் பிரித்தானியாவின் அண்டை நாடான அயர்லாந்தில், ரோசேன் என்று அழைக்கப்படும் தொலைதூர நகரத்தில் வாழ்ந்தனர். இது கவுண்டி டிப்பரரியில் உள்ள குளோனீன் கிராமத்திலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது.

அவர்கள் சுமார் 18 மாதங்களுக்கு முன்பாகவே இறந்த நிலையில், ரோசேனில் உள்ள அவர்களது கிராமப்புற பங்களாவில் உடல்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.  2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தம்பதியைக் காணவில்லை என்று அண்டை வீட்டார் கவலை தெரிவித்தபோது, காவல்துறையினர் அவர்களை சடலமாக திங்களன்று கண்டுபிடித்துள்ளனர். அயர்லாந்து பொலிசாரால் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கபட்டுள்ளது.

ஹிலாரியின் உடல் வரவேற்பறையில் இருக்க, நிக்கோலஸின் உடல் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததாகவோ அல்லது சந்தேகிக்கும்படியாக ஏதும் தவறாக நடந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாகத் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் உல்லாச கப்பல்களில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு குழந்தைகள் இருந்ததாகத் தெரியவில்லை.இதுவரை கிடைத்த துப்புகளின்படி, அவர்கள் நவம்பர் அல்லது டிசம்பரில் 2020-ல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.வாட்டர்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் மாநில நோயியல் நிபுணர் லிண்டா முல்லிகனின் பிரேதப் பரிசோதனை முடிவில்லாததால், நச்சுயியல் மற்றும் பிற சோதனைகளின் முடிவுகளுக்காக பொலிஸார் காத்திருக்கிறார்கள்.

தம்பதியினர் கோவிட் அல்லது கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *