படப்பிடிப்பில் இதயத் துடிப்பால் மயங்கி விழுந்த தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு படப்பிடிப்பின்போது இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோனே (36), திரைத்துரையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் விளம்பரத்துறையிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘ஐஸ்வர்யா’ என்ற திரைப்படத்தில் உபேந்திராவின் ஜோடியாக தனது திரையுலக பயணத்தை துவங்கிய அவர், 2007-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையானார்.

தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இதயத்துடிப்பு அதிகரித்து தீபிகா படுகோனே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து படக்குழு அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். இதனால் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்து, இதயத் துடிப்பு சீரானதையடுத்து சிறிது ஓய்வெடுத்தப் பின் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பத்தால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *