ஒரு விரலில் 129.5 கிலோ எடையை தூக்கி உலக சாதனைப் படைத்த நபர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பாடிபில்டர் தனது ஒற்றை விரலால் அதிக பழுவைத் தூக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.

வீட்டுக்குத் தண்ணீர் கேன் தூக்கிக் கொண்டு வந்தாலே மூச்சிரைக்க கண்ணாடியில் ஆர்ம்ஸ் செக் செய்யும் நமக்கு இது மிக ஆச்சரியமான செய்திதான்.

ஒருவர் ஒரு விரலால் இந்த அளவு எடையைத் தூக்குவது சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஸ்டீவ் கீலர் என்பவர்.

தனது வலது நடு விரலால் 129.5 கிலோ எடையைத் தூக்கி அசத்தியிருக்கிறார் அவர்.
தற்காப்புக் கலைகளைத் தனது தொழிலாகக் கொண்ட ஸ்டீவ் கடந்த 10 ஆண்டுகளாக யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

கீலர் தூக்கிய பழுவில் மொத்தமாக 6 வட்ட டிஸ்குகள் இருந்தன. ஒன்று 10 கிலோ எடையும், ஒன்று 20 கிலோ எடையும், மூன்று தலா 25 கிலோ எடையும், ஒன்று 26 கிலோவுக்குச் சற்று அதிகமான எடையும் கொண்டது.

இந்த வட்டுகளை ஒன்றாக அடுக்கித் தூக்கியதன் மூலம் உலக சாதனையை முறியடித்தார் கீலர்.

கின்னஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி ஸ்டீவ் கீலரின் வயது 46. அவர் தனது 18 வயது முதல் ஜூடோ, கராத்தே போன்றவற்றை கற்று வருகிறார். இந்த பயிற்சிகள் அவர் உலக சாதனை படைப்பதற்கு உதவின என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 4 ஆண்டுகளாக கைக்கு பலமளிக்கும் பயிற்சிகளையும் செய்து வருகிறார் கீலர்.

உலக சாதனையாளனாக அங்கீகரிக்கப்பட்ட கீலர் கின்னஸில், “இது தாங்க முடியாத அளவு வலி மிகுந்ததாக இருந்தது. ஆனால் என் விரல்கள் பலம் வாய்ந்தவை. நான் இது குறித்து பெருமைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த சாதனை பென்னிக் இஸ்ரேலியன் எனும் அர்மெனிய நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்தது. அவர் கடந்த 2011ம் ஆண்டு தனது நடு விரலால் 116 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் படைத்தார்.

இந்த சாதனையை தனது வளர்ப்பு தந்தைக்கு சமர்பிப்பதாக கீலர் கூறியுள்ளார். தந்தை தான் இவருக்கு ஹீரோவாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *