கடந்த 20 மாதங்களில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாகள் அச்சடிப்பு!

கடந்த 20 மாதங்களில் மாத்திரம்
ஒரு இலட்சத்து 30 ஆயிரம்
கோடி ரூபாய்கள் நாட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும்,2019
ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாய்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்
அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின்
தேசிய பொருளாதார நெருக்கடிக்கு
இதுவே பிரதான காரணம் எனவும்
தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள்
அச்சடிக்க அரசாங்கம் எடுத்துள்ள
தீர்மானமானது இலங்கையை படுகுழியில்
தள்ளப்போகின்றது எனவும், நாட்டின்
பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே
காரணமாகும்.அதில் பிரதான பங்கு
ரணில் விக்கிரமசிங்கவையும், நிகழ்கால
நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக் ஷவையும் சாரும் எனவும்
தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளில் ஐந்து நிதி
அமைச்சர்களை மாற்றியுள்ள போதிலும்
பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு
என்ன என்பதை கண்டறியவில்லை.
அமைச்சரவை இருக்கின்றதா இல்லையா
என தெரியவில்லை.

இவ்வாறு தலைகளை
மாற்றி தீர்வு காண முடியாது எனக்கூறிய
அவர், ஒட்டுமொத்தமாக அரச பொறிமுறை
மாற்றப்பட்டால் மட்டுமே இதற்கான
தீர்வை காண முடியும் எனவும் கூறினார்.

1950 களில் ஒரு பில்லியன் ரூபாயாக
இருந்த இலங்கையின் கடன் தொகையானது, இன்று 17.8 டிரில்லியன் ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

2012 ஆண்டில் இருந்து மத்திய அரசாங்கத்தின் கடன் வேறாகவும் நிறுவனக் கடன்கள் வேறாகவும் பிரித்து காட்டினர். ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் கடன் தொகையானது 21 டிரில்லியன் ரூபாயாகும்
எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானமானது வீழ்ச்சி
கண்டுள்ளது, கடந்த 2021 ஆண்டில்
அரசாங்கத்தின் வருமானமானது வெறும்
8 வீதமாகவே உள்ளது. நாளொன்றுக்கு
ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவு
என்ற ரீதியில் சென்றுகொண்டுள்ளது.

தற்போதுள்ள கடன் நெருக்கடியில் இருந்து
தற்காலிகமாக விடுபட கொழும்பில்
உள்ள வெளிநாட்டு அலுவல்கள்
அமைச்சு கட்டிடம், பிரதான தபால்
நிலையம் உள்ளிட்ட முக்கிய ஆறு
கட்டிடங்களையும் அதனுடன் இணைந்த
காணியையும் விற்பதற்கு அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான
நடவடிக்கைகளை அமைச்சரவையில்
ஆராய்ந்து வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *