இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது!

பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் மேலும் அரிசி இறக்குமதி செய்யப்பட இருப்பதோடு அரசின் கையிருப்பிலுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு விவசாயிகளுக்கு தேவையான பசளையை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தாமதமின்றி பயிர்ச்செய்கை நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அவர், உணவு நெருக்கடிக்கு தீர்வு காண பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் அமைச்சரவை ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார்.

ரஷ்ய -உக்ரேன் யுத்தம் காரணமாக பசளை பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகவும் பல நாடுகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. எமது நாடு இவை தவிர வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

கடந்த போகங்களில் போதிய அறுவடை கிடைக்கவில்லை. சிலபகுதிகளில் விவசாயிகள் இன்னும் வயலுக்கு இறங்கவில்லை. விவசாயிகளுக்கு சேதனப் பசளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இரசாயன பசளை பெறுவது குறித்து பல நாடுகளுடன் பேசி வருகிறோம். இந்தியாவில் இருந்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பசளை கிடைக்கும் வரை வயலுக்கு செல்வதற்கு காத்திருக்காமல் பசளை கிடைக்கும் நம்பிக்கையுடன் வயலில் இறங்குமாறு விவசாயிகளை கோருகிறோம். தனியார் துறைக்கு இரசாயன பசளை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு அளித்து சந்தையில் இரசாயன பசளை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பெரும்போகத்திற்கு தேவையான விதை நெல்லை சந்தையில் இருந்து பெற்று வழங்க இருக்கிறோம். அரிசி தட்டுப்பாடு காணப்படுகிறது. அரிசி இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 3இலட்ச38 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமாக தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரிசி கொண்டுவரப்பட உள்ளது.

பாவனையாளருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி செய்யப்படும். கையிருப்பில் உள்ள 40 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை, அரிசியாக மாற்றி சதொச ஊடாக வழங்க இருக்கிறோம் என அமைச்சர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *