மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தொடர்ந்து உணவளிக்க பணம் இல்லை!

பணப் பற்றாக்குறை காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கு போதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திறைசேரியுடன் இணைந்து தேவையான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விலங்கியல் பூங்கா திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஏனைய மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவளிக்க பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு முகவர் நிலையத்தில் நேற்று அமைச்சருடனான சந்திப்பின் போதே, திணைக்கள அதிகாரிகள் இந்த அவல நிலை குறித்து விளக்கினர்.
பார்வையாளர்களின் வீழ்ச்சியால் நிலைமை மோசமடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கிய பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் 59 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதுடன், மேலும் மீதமுள்ள ஆண்டுக்கு 120 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.