குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்!

சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று திரும்பியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய குரங்கு அம்மை நோயினால் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

குரங்கு அம்மை:

குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும்.

பரவும் விதம்:

இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சமைக்கும்போது இறைச்சியை சரியாக வேக வைக்காமல் இருப்பது பார்க்கப்படுகிறது.

இந்த குரங்கு அம்மை மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய ஆடைகள், துண்டு ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படுவதன் மூலமோ அல்லது அதை சுவாசிப்பதன் மூலமும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.

குரங்கு அம்மையின் அறிகுறிகள்:

குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.

குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா?

மத்திய ஆப்பிரிக்காவில் இந்த குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா என உலக சுகாதார நிறுவனத்தினால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், தரமற்ற மருத்துவ சேவையை பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயினால் இறக்க வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் முறையான சிகிச்சையை மேற்கொண்டால் ஒரு சில வாரங்களில் குணமடைகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா?

குரங்கு அம்மையைக் குணப்படுத்த தற்போது தனியாக மருந்துகள் என ஒன்றும் கிடையாது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறப்பு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்கலாம். இதன் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்ப் பரவாமல் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *