இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்!

இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தேநீர் மொய் விருந்து நடத்தி நிவாரணம் திரட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில் கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற‌ பெயரில் டீ கடை நடத்தி வந்த சிவக்குமார் என்பவர் தற்போது புதுக்கோட்டை அருகே கேப்பரை அருகே உள்ள இந்திரா நகரில் தேனீர் கடை நடத்தி வருகிறார்.

கஜா புயல் பாதித்த போது அப்பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சிவக்குமார் தனது டீ கடையில் வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். மேலும் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பகுதி வறட்சியான சூழ்நிலையை உணர்ந்து செம்மரம், சந்தன மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய சிவகுமார் கடந்த கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பொது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கினார்.

தற்போது பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் பலரும் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவ சிவக்குமார் தனது கடையில் தேநீர் மொய் விருந்து நடத்தி நிவாரணம் திரட்டி வருகிறார். அதன்படி, இன்று தனது கடையில் தேனீர் குடிப்பவர்களிடம் எந்த ஒரு தொகையும் வாங்காமல் இலங்கை மக்களுக்காக உதவி கரம் நீட்ட நிவாரணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் வசூலிக்கப்படும் தொகையை வாய்ப்பிருந்தால் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கொடுப்பேன் என்றும் இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மூலம் வசூல் செய்த தொகையை வழங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *