உக்ரைன் போரால் உலகம் முழுவதும் ஏற்படவிருக்கும் பாரிய உணவுப் பிரச்சினை!

உக்ரைன் போரால் உலகம் முழுவதும் உணவுப்பிரச்சினை ஏற்படும் என்றும், இதுவரை இல்லாத அளவில் பட்டினி அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ள விடயம், உலக மக்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

உலகம் பெரும் உணவுப் பிரச்சினையை சந்திக்க உள்ளது என்று எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவரான Antonio Guterres, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதன் விளைவாக, நிலைமை மேலும் மோசமாக மாற உள்ளது என்று கூறியுள்ளார்.

உலகில் பட்டினியின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறும் Antonio Guterres, கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களுடைய எண்ணிக்கை, இரண்டே ஆண்டுகளில் 135 மில்லியனிலிருந்து 276 மில்லியனாக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

ஏற்கனவே உணவுப் பிரச்சினைகள் உலகில் காணப்படும் நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் உலகின் தேவையில் கணிசமான அளவுக்கு உணவு தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள் என்பதுடன், உலகம் முழுவதும் விவசாயத்துக்குப் பயன்படும் உரங்களையும் அந்நாடுகள் உற்பத்தி செய்வதால், உக்ரைன் போர் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஆகவே, தான், ரஷ்யா மற்றும் சில முக்கிய நாடுகளுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள Antonio Guterres, பிரச்சினையை சற்றே எளிதாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்படலாம் என தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனாலும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு இன்னமும் பல விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அந்த ஒப்பந்தம், உக்ரைன் துறைமுகங்களில் சேமித்துவைக்கப்பட்டுள்ள பல டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது மற்றும் ரஷ்ய உணவும் உரங்களும் தடையின்றி உலகச் சந்தையை அடைவது ஆகியவை குறித்ததாக இருக்கும் என்று கூறியுள்ள Antonio Guterres, இதற்கு மேல் விவரங்களை வெளியிடுவதால் அது இந்த விடயத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும் என்பதால், இதற்கு மேல் விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *