காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் மற்றும் நகர சபை ஊழியர் கைது!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரடுவை நகர சபை ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடில், சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைது செய்வதற்கு நீதவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லது உரிய முகவரிகளில் காணப்படாத சந்தேக நபர்களைக் கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்:

01. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
02. சனத் நிஷாந்த
03. சஞ்சீவ எதிரிமான்ன
04. மிலான் ஜயதிலக்க
05. தேசபந்து தென்னகோன், (மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்)
06. டான் பிரியசாத்
07. மஹிந்த கஹந்தகம
08. நாலக விஜேசிங்க
09. பந்துல ஜெயமான்ன
10. தினேத் கீதக
11. சமன்லால் பெர்னாண்டோ
12. அராபி வசந்த
13. சுபாஷ் (தெஹிவளை நகர சபை)
14. அமல் சில்வா
15. சமீர சதுரங்க ஆரியரத்ன
16. ருவன்வெல்லே ரமணி
17. துசித ரணபாகு
18. சஜித் சாரங்க
19. புஷ்பலால் குமாரசிங்க
20. நிஷாந்த மெண்டிஸ்
21. புஷ்பகுமார (முன்னாள் இராணுவ சிப்பாய்)
22. சவின் பெர்னாண்டோ (வென்னப்புவ)

ஏற்கனவே பயணத்தடை பெற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *