5 முஸ்லிம் அமைச்சர்கள் சாதிக்காததை நான் சாதித்து காட்டியுள்ளேன்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும், நிதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு அலி சப்ரியிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியை வட்சப் மூலமாக தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் பல்வேறு விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

கடினப் போக்காளர்களாக அறியப்பட்ட வீரவன்ச, கம்மன்பில இருந்த அமைச்சரவையில் நானும் பங்கு கொண்டேன். 5 முஸ்லிம் அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் சாதிக்காத விடயங்களைக்கூட, இந்த அமைச்சரவையில் இருந்து நான் சாதித்தேன்.

5 முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனை வன்முறைச் சம்பவங்கள், நிகழ்ந்தன என்று சிந்தித்துப் பாருங்கள். அலி சப்ரியாகிய நான், இருந்த அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு எதிராக, எந்தவொரு வன்முறைச் சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொண்டேன்.

முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக என்னால் முடிந்த பணிகளை விளம்பரமின்றி மேற்கொண்டேன். சிலவற்றில் அதில் வெற்றியும் கண்டேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தாக மாறிவிருந்த சில விடயங்களை தடுத்து நிறுத்தினேன். மற்றும் சில விடயங்களை தாமதப்படுத்தினேன்.

நான் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவன். என்னை தெரிவுசெய்த கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் விசுவாசமாக செயற்பட்டேன். எனினும் சமூக நலன் எனக்குள்ளும் குடியிருந்தது. நானும் புனித கலிமாவை மொழிந்தவன்தான். எனக்குள்ளும் ஈமான் இருக்கிறது.

எனினும் நான் சார்ந்த முஸ்லிம் சமூகமோ எனக்கு சாமிட்டுக் கொண்டிருந்தது. எனக்கு சேறடித்து எனக்கெதிராக கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருந்தது. எனது மகனின் A/L பரீட்சைக்குக் கூட தொந்தரவு செய்தது.

எனது லொகேசனை சமூக ஊடகங்களில் பரவச் செய்து, வன்முறையாளர்களை எனக்கெதிராக திருப்பிவிட முயன்றது. முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலரின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருந்தது.

எனினும் நாட்டு நலன், சமூக நலன் போன்றவற்றில் நான் இரண்டாம் நபராக செயற்படவில்லை. அவ்வாறு இனிமேல் செயற்பட போவதும் இல்லை.

இன்று சனிக்கிழமை 14 ஆம் திகதி நடைபெற்ற எமது கட்சிக் கூட்டத்தில் 91 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவரினதும் முன் ஜனாதிபதி எனக்கு நிதி அமைச்சை பொறுப்பேற்கும் படி கேட்டார். நான் மறுத்து விட்டேன். அங்கிருந்த 91 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவியை ஏற்கும்படி வலியுறுத்தினார்கள். அதனையும் மறுத்து விட்டேன்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எனக்கு அமைச்சுப் பதவியை வழங்க விரும்புகிறார். அதனை அவர் என்னிடம் கூறினார். தயவுசெய்து எனக்கு எந்த அமைச்சுப் பதவியையும் தராதீர்கள்,  பொறுப்பேற்க மாட்டேன் என மறுத்துவிட்டேன்.

எனக்கு பதவிகளோ, சலுகைகளோ முக்கியமல்ல.  அமைச்சுப் பதவி முக்கியமல்ல. இவற்றினூடாக கிடைக்கும் நலன்களைவிட, சமூக நலனை பிரதானமாக கருதுகிறேன். அமைச்சரவை சம்பளத்தைவிட எனது சட்டத்தொழில் மூலம் கிடைக்கும் ஊதியம் அதிகமாகும், எனத் தெரிவித்த சட்ட்த்தணி அலி சப்ரி, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடருவேன் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *