சவாலை ஏற்றுக் கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி பார்க்கலாம்!

அதிகரித்த கடன் சுமை, கடனை மீள செலுத்த முடியாமை, ரூபாவின் மதிப்பிறக்கத்தின் மூலம் உள்நாட்டு வர்த்தக பாதிப்பு, ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது. மக்கள் பசியுடன், எரிபொருளுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு, இறக்குமதியில் கட்டுப்பாடு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவதில் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் உடன் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்களாகும்.

இந்த பின்னணியில்தான் மக்கள் போராட்டம் உருவானது, எல்லோரும் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள், பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியது, தீர்வுகள் இன்றி நாட்கள் கடந்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆள் ஆளுக்கு குற்றம் சுமத்தி நாட்களை கடத்தினர். அரசை பொறுப்பேற்குமாறு பல தடவை எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் யாரும் முன் வராத சூழல் காணப்பட்டது.

இறுதியாக அகிம்சை வழியில் போராடிய போராட்டகாரர்கள் தாக்கப்பட்டனர், போராட்டக்காரர்களை தாக்கியதால் பலனாக மக்கள் ஆத்திரத்தில் அமைச்சர்களின் வீடுககள் சொத்துக்களுக்கு தேடித் தேடி தீ வைத்தனர், பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

இத்தகைய ஸ்திர நிலையில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை ஏற்றப்பட்டது. உடனடியாக ஆட்சியை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல தடவைகள் ஜனாதிபதி அழைத்தார். இறுதிநேரம் வரை இருந்துவிட்டு தனது கட்சிக்காரர்களின் நியாயமான ஒரு சிலரின் அழுத்தத்தின் பின்னணியில் ரணிலை நியமிக்க முடிவானதன் பின்னர் தான் பதவியேற்கப்போவதாக சஜித் அறிவித்தார். இது மிகவும் கோழைத்தனமான முடிவாகும்.

நாட்டில் இவ்வளவு பிரச்சினை உருவாகியும் எதிர்கட்சிகளால் மக்கள் சார்பாக ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டு மக்கள் குறித்து எந்தவித கவலையும் அவர்கள் கொள்ளவில்லை. தங்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தையே குறிக்கோளாக கொண்டு நிபந்தனைகள் பல விதித்தனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக ஆட்சியமைக்க நினைத்தனர். அது முடியவில்லை. இத்தகைய பின்னணியில் யாரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க முன்வராத சூழலில்தான் வேறு வழியின்றி ரணிலை அழைத்து பொறுப்பை கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் ரணிலின் நியமனம் காலத்திற்கு ஏற்றதாகும். நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து மிகச்சிறந்த முடிவினை எடுக்கும் ஆற்றல் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. சர்வதேச ரீதியாக பல அங்கீகாரம் கொண்ட பல திட்டங்களை கடந்த காலங்களில் நாட்டுக்கு முன்வைத்துள்ளார். அவற்றுக்கு மக்கள் சரியான இடம் கொடுக்கவில்லை.

ஆனால் இன்றய சூழலில் ரணிலால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவரின் எதிரிகள் கூட இன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். பதவியேற்ற புதிய பிரதமருக்கு உலக நாடுகள் அனைத்தும் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளன. இவைகள் நெருக்கடியில் உள்ள மக்களுக்கு நல்ல சமிக்ஜையாகவே தெரிகிறது.

அதே நேரம் அவர் பதவி ஏற்ற கையோடு டொலரின் விலை ஸ்திரமடைய தொடங்கியுள்ளது, பல உலக நாடுகள் நமது நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளது. ஜப்பான் மற்றும் எக்ஸிம் வங்கி என்பன எமக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. பல பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வரவுள்ள நல்ல செய்திகள் எமக்கு கிடைக்கின்றன.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீன நாடுகளை உள்ளடக்கி இலங்கைக்கு நிதி வழங்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டினை நடத்த திட்டமிடுகின்றனர்.

இவ்வாறான விடயங்கள் சிதைந்துபோயுள்ள எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும் சிறந்த வழி முறைகளாக நாம் நோக்கலாம். என்னால் இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட முடியும் என சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி குறிப்பிட்ட கால அவகாசத்தினையும் வழங்கி பார்க்கலாம் என்றும் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *