கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கே அதிகளவு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான 19 சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் இரத்தவ்வ பிரதேசத்திலுள்ள வீடு, சுற்றுவட்டத்திலுள்ள வீடு மற்றும் பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரவில் உள்ள வீடு என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பத்தரமுல்ல வெவ வீதியிலுள்ள வீடொன்று தாக்கப்பட்டுள்ளது. குருநாகல் வில்கொடவில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் மல்கடுவாவில் உள்ள மதுபான தொழிற்சாலைக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

லக்கல பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில் விலங்குகள் துரத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மேலும், குருநாகல் மாவத்தகம, நிக்கவெரட்டிய, மதுரங்குளிய மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்சயில் உள்ள வீடு மற்றும் கொழும்பில் உள்ள ஹோட்டல் என்பனவும் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று மாத்திரம் சேதமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *