மைத்திரி-மஹிந்தவும் கோட்டா-ரணிலும் கூட்டு ஆட்சி இடையில் எந்த வித்தியாசமும் இல்லை!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நியமனத்தில் வெளித்தோற்றத்தில் ரணில் இருப்பதாகவும், பின்புலத்தில் பசில் ராஜபக்ச இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (13) பெலவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சியமைத்ததற்கும் தற்போது கோட்டாபயவும் ரணிலும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏலத்தில் விலைபோவார்கள் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச ரணில் புரிந்த குற்றங்களை முன்வைத்து அவற்றுக்கு தக்க பதில் தருவதாக மக்களிடம் வாக்குறுதி வழங்கி அதிகாரத்திற்கு வந்தார். அதுபோலவே, ரணில் – மைத்திரி தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கும் போது ராஜபக்சக்களின் குற்றங்களை வெளிப்படுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்கப்போவதாகக் கூறி ரணில் ஆட்சிக்கு வந்தார்.

இவர்கள் இருவரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்போகிறார்களா என்று நாங்கள் பொறுத்திருந்து பார்க்கப்போகிறோம்.

ஆனால், மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த கேடுகெட்ட அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *