போர் வீரனாக புகழப்பட்டவர் திடீரென வில்லனாக மாறிய மஹிந்த ராஜபக்ச!

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையிலிருந்து பொது மக்கள் இன்னும் மீளவில்லை. பல அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுவில் தோன்றுவதையும் தவிர்த்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் வீரன் என்று பெரும்பான்மை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று திடீரென வில்லனாக மாறிவிட்டார்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை குறிவைத்ததற்காக மகிந்தவின் ஆதரவாளர்களை பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதுவே வன்முறைக்கு வழியேற்படுத்தியாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையிலும் ராஜபக்ச சகோதரர்கள் ஒன்றாகவே இருந்துள்ளனர். ஆனால் இம்முறை அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு புதியவர் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்ததிலிருந்து பிரச்சினைகள் ஆரம்பமாகின.

இலங்கை அரசியலில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் ராஜபக்ச குடும்பம் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மாதம் போராட்டம் தொங்கியது. இதன் பின்னர், தனது முதல் தேசிய உரையில், சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை புறக்கணித்து, அவர் நாடாளுமன்றத்திற்கு சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க முன்வந்தார். அத்துடன், புதிய பிரதமரை நியமிக்க முன்வந்தார்.

எனினும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் குண்டர்களால் குழப்பியடிக்கப்பட்டது. இதனால் கடந்த 9ம் திகதி வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.

வன்முறை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு உத்தரவை மீறி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அரசியல் வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. மகிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மகிந்த ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்த வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சாக்குப்போக்கை வழங்குவதற்காக வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எச்சரித்துள்ளனர். எனினும், அத்தகைய நடவடிக்கை திட்டமிடப்படவில்லை என்று இராணுவம் மறுத்துள்ளது.

“நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் போது, ​​அதை சமாளிக்கும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுகிறது” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறோம் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம்.

இராணுவத்திற்கு அத்தகைய எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் கீழ் கடைகள், வணிகங்கள் மற்றும் அலுவலகங்கள் நாளை காலை வரை மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மூத்த சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சே, தனது சொந்த பாதுகாப்பிற்காக வடகிழக்கில் உள்ள கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக இராணுவம் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *