முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் பருப்பு,டீசல், சிலிண்டர்கள்,இரசாயன உரங்கள்,கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர் அச்சல நிமந்த ஆகியோரின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களில் வீடுகளில் மிகப்பெரிய அளவிலான இரசாயன உரங்கள், எரிவாயு சிலிண்டர்கள், டீசல் மற்றும் பருப்பு தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர் அச்சல நிமந்த ஆகியோரின் வீடுகளில் இருந்து 12.5 கிலோகிராம் எடையுள்ள 140 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் அந்த பகுதி மக்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் லேக் வீதியிலுள்ள வீட்டில் மட்டும் 80க்கும் மேற்பட்ட லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திஸ்ஸமஹாராம, கிரிந்த மாகம பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், 300 யூரியா உர மூட்டைகள், 3000 லீற்றர் டீசல், 200 நெல் மூட்டைகள் மற்றும் சிவப்பு பருப்பு மூட்டைகள் போன்றவற்றை பிரதேச மக்களுக்கு விநியோகித்த பின்னர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திஸ்ஸமஹாராம சேனபுரவில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இதேவேளை, நேற்று பிற்பகல் 3 மணியளவில் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் திம்புலாகல பந்தனகலவில் அமைந்துள்ள பண்ணைக்கு ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சிலர் தீ வைத்து உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 ஏக்கர் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சிய அறையில் சுமார் 400 மூட்டைகள் யூரியா உரம் மற்றும் மற்றொரு இரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை விவசாயிகளால் கைப்பற்றப்பட்டன.

நாட்டில் உரம், எரிபொருள், எரிவாயு என்பனவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

ஆட்சியில் இருந்த இவர்களின் வீடுகளில் பெருந்தொகை பொருட்கள் மீட்கப்பட்டமை மக்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் ஒரு மூடை யூரியா பசளை, 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அதற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:ceylon nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *