இன்றைய போராட்டம் வெறுமனே ராஜபச்ச குடும்பத்தை மட்டும் அனுப்புவதற்கான போராட்டமல்ல!

சமகாலத்தில் இலங்கையில் நடந்து வருகின்ற மக்கள் போராட்டத்தின் அடிப்படை , வெறுமனே ராஜபச்ச குடும்பத்தை மட்டும் ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை! முதல் உடனடி நோக்கம் அதுதான் என எடுத்துக் கொள்ள மட்டும்தான் முடியும்!

இதுவரையான இலங்கை அரசியலில் இதுவொரு மிக முக்கியமான மக்கள் எழுச்சியாகும்! தேர்தல் வழியாகவே இதுவரை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் தடவையாகவே மக்கள் போராடி ஆட்சியாளர்களை வீட்டுக்கு  நிர்ப்பந்தித்து அனுப்ப தொடங்கி உள்ளார்கள்! இதில் முதல் கட்டம் மகிந்த பதவி விலகியவுடன் முடிந்து , இப்போது இப்போராட்டம் மக்கள் வெற்றியுடன் இரண்டாம் கட்டமாக கோதாவை நோக்கி முன் செல்லத் தொடங்கி விட்டது!

இப் போராட்டத்தின் வழியாக, கோதா, மகிந்த சார் அரசியலுக்கு வெளியில் உள்ள பல கட்சிகளும் , அவர் தம் தீவிர ஆதரவாளர்களும் – இவர்கள் போய்விட்டால் தமது தலைவர்கள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள், இனி தாம் எதிர்பார்ப்பதை பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் , அதிகமதிகமாக ஆசை கொண்டிருக்கின்றனர்! அந்த ஆசை எதிர்பார்ப்பின் மயக்கத்தில் தளத்தில், மக்கள் திரள் மத்தியில் உருவாகிவரும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கத் தவறி விடுகின்றனர்!

இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை, இப்போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திகள் எந்த வகையான அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என. “ System Change” என்பதே இந்த போராட்ட முன்னெடுப்பின் அடிப்படையாகும்! ஆட்கள் மாறுவது அல்ல, முழு அமைப்பு முறையும் மாற வேண்டும்’ என்பதே அடிப்படைக் கோரிக்கையாகும்!

உண்மையில் சொல்லப் போனால், இன்றைய அரசியல் மாற்றங்களுக்கு இந்த கட்சிகள் இம்மியளவும் பங்களிக்கவில்லை! இன்னும் இவர்கள் பாராளுமன்றத்திற்குள் ஆள்மாறி ஆள், கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்!

இருக்கும் அபத்தம் போதாது என்று இலங்கையின் இரண்டு முஸ்லிம் கட்சி தலைவர்களை , “ சத்தியம்” பண்ண அவர்களது எம். பீக்கள் அழைப்பதும், அவர்கள் அதற்கு போக்கு காட்டி, ஊர் ஊராக “தொப்பியை “ போட்டுக் கோண்டு, கோதாவுக்கு எதிராக குரல் தருவதும் கூட நடந்து வருகிறது… இன்னொரு சிறு கட்சியோ அடிக்கும் உதைக்கும் பயந்து , மகிந்த ராஜினாமா செய்த அறிவிப்பு வந்த பின்பு , மகிந்தவுக்கும் கோதாவுக்கும் எதிராக கொடி பிடிக்கத் தொடங்கி உள்ளது! முஸ்லிம்களின் உடலங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, கோதா மகிந்த குடும்பத்தை “ காருண்யவான்கள்” என அழைத்த குருடர்களுக்கு இப்போதுதான் பார்வை கிடைத்துள்ளது. இவைகள் இலங்கை அரசியலில் இல்
லாத முஸ்லிம் கட்சி அரசியலுக்குள் மட்டுமே நடக்கும் சில விசித்திரங்கள்….

நேற்று காலி முகத்திடலுக்குள் புகுந்த மகிந்தவின் கூலிப்பட்டாள அதிரடியை அடுத்து, அங்கு சென்ற சஜித் பிரேமதாசாவுக்கு எழுந்த எதிர்ப்பலையும் , சந்திரிகாவின் வலது கரமும் தீவிரமாக கோதா மகிந்த தரப்பை, நீண்டகாலமாக எதிர்த்துவரும் குமார வெல்கம மீதான தாக்குதலும் , போராட்ட சக்திகள் கொண்டிருக்கின்ற அரசியல் உணர்வை வெளிக்காட்ட சான்று பகர்கின்றன.

இப்போதுதான் சிலருக்கு விளங்குகிறது, இது சஜீத்தை அல்லது சந்திரிகாவை அதிகாரத்திற்கு கொண்டு வர போராடுபவர்கள் அல்ல இந்த போராட்டக்கார
ர்கள் என… ஆகவே அந்த போராட்ட சக்திகளின் தெளிவு , இன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் தரப்புக்கு அல்லது முஸ்லிம்களின் பெயரால் அரசியல் நடாத்தும் முஸ்லிம்களுக்குள் உள்ள 3 கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் உள்ளதா?

கோதா, மகிந்தவுக்கு எதிராக ஏன் பெரும்பான்மை மக்கள் போராடி வருகின்றனர்?

01. அரசியல் சர்வதிகாரம்
02. ஏகபோக அதிகாரம்
03. குடும்பத்திற்கு முன்னுரிமை
04. முறைகேடாக சொத்து சேர்த்தல், ஊழல்
05. மக்களின் தலையில் இனவாதத்தை அல்லது இன அடையாளத்தை வைத்து செய்யும் ஏமாற்று அரசியல்
06. இத்தியாதி …. இத்தியாதி ….

இப்போது நாம் சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறோம்!  இந்த 3 கட்சிகளான ( முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்) கட்சிகள் மகிந்த , கோதா செய்ததைத்தானே செய்து வருகின்றனர்!

கோதா மகிந்த செய்தால் தவறு, அவர்களை எதிர்க்க வேண்டும் , தமது கட்சித் தலைவர்கள் செய்தால் குருடனாய் நடித்து, மக்களை தொடர்ச்சியாக முட்டாளாக வைக்க முனாபிக் தனமாக நடந்து கொள்ள வேண்டும்) செம ஆட்களைய்ய நீங்கள்! 

*இந்த கட்சிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் உள்ளதா?

* இந்தக் கட்சிகளின் யாப்புகள்( பாவம் இந்த கட்சிகளுக்காக எழுதும் பலர் இந்தக் கட்சிகளின் யாப்பை கூட படித்திருக்க மாட்டார்கள். அல்
அல்லது படித்திருந்தால் கோதா மகிந்தவை எதிர்க்க முன் தமது தலைமைகளை அல்லாவா எதிர்த்திருப்பார்கள்?).

* கோதாவின் அமைச்சரவைக்கும், இந்த கட்சிகளின் அரசியல் பீடங்களுக்கும் என்ன வேறுபாடு?இந்த குழுவில் இருப்போர் யார்? எப்படி இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்?

* இந்த கட்சிகளின் தலைவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வைத்துள்ள சொத்துக்கள் எங்கிருந்து வந்தன?

* எல்லா அரசியல் பீட கூட்டங்களிலும் , இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவர்களுக்கு கொடுக்கும் “ மர்மம்” தான் என்ன?

* இந்த 3 தலைவர்களும் மகிந்தவை ஆதரித்து , அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் தானே?

* இவர்கள் இந்த நிலைமைக்கு வழிவகுத்த 18 வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கி, மகிந்தவின் அரசியல் பலத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக பலமூட்டியவர்கள்தானே?

* குற்றவாளிகள், ஒரு இரவுக்குள் எப்படி இந்த முஸ்லிம் சமூகத்திற்குள்  சுத்தவாளியாக மாற முடிகிறது?அரசியல் கல்வியற்ற மக்கள் முன் நாடகமாட முடிகிறது?

( இது போல் இன்னும் பல கேள்விகள் உள்ளன, உங்களுக்கு. இந்த தலைமைகளை நோக்கி உள்ள கேள்விகளை பின்னூட்டத்தில் எழுதலாம்).

இப்படி பல கேள்விகள் உள்ளன, இவைகளுக்கும் விடை வேண்டும்! இனியும் இவர்கள் மக்களை எய்க்க முடியாது! 

இந்த கட்சிகளை இன்னும்  “ காவித் திரியும்” பலருக்கு கோதா, மகிந்த மீதான விமர்சனம் இனிக்கும். நாங்கள் பொதுவில் இப்படியான அரசியல் கேள்விகளை இந்த முஸ்லிம் ஏமாற்று தலைவர்களை நோக்கி கேட்டால் கசக்கும்!

மாற முடியாதவர்கள் அப்படி இருக்க, மாற வேண்டிய மக்கள் திரள் மாறும்! இன்று நாட்டின் வளத்தை சுரண்டி அதிகார மமதையில் ,மக்களை ஏமாற்றியவர்களுக்கு நம் கண் முன்னே நடப்பதுதான் நடக்கும்!

அரசியல் அடிப்படை விளங்கினால், உடன் மாற்றங்கள் நிகழும்! விளங்கத் தவறினால் கொஞ்சம் சுணங்கும்!
அவ்வளவுதான்!

இந்த 3 கட்சிகளையும்  சாராதவர்கள் மட்டுமே இப்பதிவை விரும்புவர் என மட்டுப்படுத்த முடியாது,ஏனெனில் இன்று மகிந்த , கோதாவை எதிர்க்க , புதிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து போராடி வரும் மக்களில் கணிசமோனோர் தாம் எதிர்ப்போரை ஒரு 2 மாதங்களுக்கு முன்வரை ஆதரித்து  நின்றோர்தான்!

எங்களை பொறுத்தவரை மகிந்த கோதாவை , உண்மையாண அரசியல் அர்த்தத்தில் எதிர்ப்போர் , இந்த முஸ்லிம் தலைவர்களை ஆதரிக்க எந்த அரசியல் நியாயங்களும் இல்லை!

இராணுவ ஒடுக்குதலுக்கு முன், தம்முயிரை துச்சமென மதித்து இப்போராட்டத்தை தொடங்கி வழி நடாத்திக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இந்த பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வரவா தமது வாழ்வை அர்ப்பணித்து நிற்கின்றனர்?

இலங்கை முஸ்லிம் சமூகமே! ஒரு கண்ணை விழித்து, அடுத்த கண்ணை மூடிக் கொண்டிருக்காதே!

இந்த நேரம்  இதனை சொல்லாது விட்டால் எந்த நேரம் சொல்லுவது?
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி: மஹ்ரூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *