ஐந்து பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் சஜித் அணி அறிவிப்பு!

ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் விதிவிலக்கான தலைமைத்துவம் தேவை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை முன்னெடுத்து செல்ல முன்வரவில்லையென்றால் எமது கட்சி மீதுள்ள மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

“சிறப்பு தலைமை தேவை ஒரு சாதாரண சூழ்நிலையில் அல்ல, ஒரு நெருக்கடியிலேயே வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது, ​​அதற்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையை சமாளித்து நாட்டிற்கு சிறந்ததை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.

மறுபுறம், இந்த நேரத்தில் நாங்கள் முன்வரவில்லை என்றால், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்துவிடும். இதன்படி 13 முன்மொழிவுகளுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்வை நடைமுறைப்படுத்த இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.

முதலில் 20வது திருத்தம் நீக்கப்பட்டு 19வது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்ததாக நாட்டின் நீண்ட கால கோரிக்கையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்த முழு திட்டத்தையும் அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

உண்மையில் சட்டத்தரணிகள் சங்கமே தற்போது நாட்டில் சுதந்திரக் கட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கட்சியாகும். அவர்களின் முன்மொழிவை ஏற்க முடிவு செய்தோம். மேலும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், கடுமையான பொருளாதார நெருக்கடியும் உள்ளது.

இதற்கு தீர்வு காண கடந்த காலங்களில் கடுமையாக உழைத்தோம். எனவே, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு இந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் ஒன்றுபடுகிறோம்.

இதன்படி, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு நாம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம். சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் எமது மக்களுக்கு உணவு, மருந்து, கைத்தொழில் போன்றவற்றுக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களை வழங்கவும், இந்த நாட்டை வீழ்ச்சியடையாமல் கைப்பற்றவும், எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும்.

அதன்படி, நல்ல தன்னம்பிக்கையோடும், நல்ல தயாரிப்போடும் இந்தப் பணியை மேற்கொள்கிறோம். இந்த நெருக்கடியை நாம் எதிர்கொண்டு ஒரு நாடாக மீண்டு வர முடியும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *