பூமியின் நீர் சந்திரனுக்குப் போனது எப்படி? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

அமெரிக்கா நிலவில் கால் பதித்ததற்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் சந்திரனுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இயந்திர ரோபோட்டுகள் சந்திரனது மேற்பரப்பை ஆய்வு செய்து வருகின்றன. அவை சந்திரனின் நிலப்பரப்பு தகவல்கள் மற்றும் புவியியல் அம்சங்களை சேகரித்து வருகின்றன. மேலும் நிரந்தரமாக இருண்டு இருக்கும் பகுதிகளில் கூட ஆய்வு செய்து வருகின்றன.

2008 ஆம் ஆண்டு நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது, இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இதன் பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் கழித்து, இந்த நீர் சந்திரனுக்கு எங்கிருந்து வந்தது என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது பூமியிலிருந்து வந்தது.

அலாஸ்கா பல்கலைக்கழகத்தின் ஃபேர்பேங்க்ஸ் ஜியோபிசிகல் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் தலைமையில் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் படி, நிலவில் உள்ள நீர், பூமியின் மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள் வெளியேறி நிலவில் இணைந்ததன் விளைவாக இருக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அலாஸ்கா பல்கலைக்கழகத்தின் குந்தர் க்ளெடெட்ச்கா தலைமையில், நிலவின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் உள்ள நீரின் மூலத்தை அடையாளம் காண நடந்து வரும் ஆய்வுகளின் மூலம் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தை நோக்கி முன்னேறித் தரையிறங்குவதற்கான தளங்களை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றனர். அதன் பொருட்டு சந்திரனின் காற்றில்லாத உலகில் நீர் இருப்புகளைக் கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

“நாசாவின் ஆர்ட்டெமிஸ் குழு சந்திரனின் தென் துருவத்தில் ஒரு அடிப்படை முகாமை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதால், பூமியில் பல யுகங்களுக்கு முன்பு தோன்றிய நீர் அயனிகள் விண்வெளி வீரர்களின் வாழ்க்கை ஆதரவு அமைப்பிற்குப் பயன்படலாம்” என்று க்ளெடெட்ச்கா கூறினார்.

பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறிய அயனிகளில் இருந்து உருவாக்கப்பட்ட நிலவு கிட்டத்தட்ட 3,500 கன கிலோமீட்டர் பெர்மாஃப்ரோஸ்ட் அல்லது மேற்பரப்பு திரவ நீரை மறைத்து இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி மதிப்பிடுகிறது. பூமியிலிருந்து வெளியேறும் மிகக்குறைந்த அயனிகளில் 1 சதவீதம் சந்திரனை அடைந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வு மதிப்பீடுகள் கணிக்கின்றன.

இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. இந்த தனித்துவமான இடங்கள் எதிர்கால விண்கலங்கள் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கும் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியமான தளங்களாகச் செயல்படலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

நிலவுக்கு நீர் எவ்வாறு செல்கிறது?

பூமியின் காந்த மண்டலத்தின் வால் வழியாக ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள் சந்திரனுக்குள் செலுத்தப்படுகின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது சந்திரன் பூமியைச் சுற்றி வரும் மாதாந்திர பயணத்தின் ஐந்து நாட்களில் நடக்கிறது. காந்தமண்டலம் என்பது பூமியின் காந்தப்புலத்தால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் இருந்து வரும் பல்வேறு துகள்களின் தொடர்ச்சியான வருகையிலிருந்து பூமியைப் பாதுகாக்கிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தலைமையிலான ஆய்வுகள் ஏற்கனவே காந்த மண்டலத்தின் இந்த பகுதி வழியாக நிலவின் போக்குவரத்தின் போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நீர் உருவாக்கும் அயனிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளன. “காந்தமண்டலத்தின் வால் பகுதியில் உள்ள சந்திரனின் இருப்பு, காந்த வால் என்று அழைக்கப்படுகிறது. இது தற்காலிகமாகப் பூமியின் காந்தப்புலக் கோடுகளில் சிலவற்றைப் பாதிக்கிறது. அதனால் அவை உடைந்து, பல ஆயிரம் மைல்கள் விண்வெளிக்கு செல்லும்” என்று அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காந்தமண்டலத்தில் சந்திரனின் இருப்பு, இந்த உடைந்த-புலக் கோடுகளில் சிலவற்றை அவற்றின் எதிரெதிர் உடைந்த சகாக்களுடன் மீண்டும் இணைக்க காரணமாகிறது. அது நிகழும்போது, ​​பூமியிலிருந்து வெளியேறிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள் மீண்டும் இணைக்கப்பட்ட புலக் கோடுகளுக்கு விரைந்து மீண்டும் பூமியை நோக்கி விரைவாக வருகின்றன. அப்படி பூமியை நோக்கி வரும் போது இந்த அயனிகள் வழியில் சந்திரனைத் தாக்கி ஒன்றிணைந்து, சந்திரனில் நிரந்தர உறைபனியை உருவாக்குகின்றன.

“இது சந்திரன் மழையில் இருப்பது போன்றது. நீர் அயனிகளின் மழை பூமிக்குத் திரும்பும்போது சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது” என்று க்ளெடெட்ச்கா கூறினார்.

இந்த கண்டுபிடிப்புகள் நிலவில் நிரந்தரமாக உறைந்திருக்கும் பகுதிகள் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும். இதன் மூலம் காற்று இல்லாத சந்திரனில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு இந்த மறைநீர் பயன்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *