தந்தை நீதிபதியின் கார் டிரைவர் மகள் சிவில் நீதிபதியாக தெரிவு!

மத்திய பிரதேசத்தில் நீதிபதியின் கார் டிரைவராக இருப்பவரின் மகள் தனது 25 வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் சேர்ந்த அரவிந்த் குப்தா என்பவர் நீதிபதி ஒருவரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அரவிந்த் குப்தாவின் மகள் வன்ஷிதா குப்தா (25). இந்நிலையில் மாநில அளவில் நடத்தப்பட்ட நீதித்துறைக்கான தேர்வில், 25 வயதே ஆன வன்ஷிதா குப்தா சிவில் நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அளவில் அவர் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து அரவிந்த் குப்தா கூறுகையில், ‘எனது மகளின் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறேன். நீதிபதியின் கார் டிரைவராக பணியாற்றி வரும் நான், எனது மகளும் ஒரு நாள் நீதிபதியாக வருவாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது மகள் தனது முதல்  முயற்சியிலேயே சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றது, எங்களது  குடும்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் சட்டப்  படிப்பை பயின்றார். இந்தூரில் செயல்படும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து சிவில் நீதிபதி பணிக்கான தேர்வுக்குத் தயாரானார். பள்ளியில்  படிக்கும் போது, ​​வன்ஷிதா விமானியாக ஆசைப்பட்டார். ஆனால் ஒரு நாள்  என்னுடன் நீதிமன்றத்திற்கு வந்தார்.

அங்கு நீதிபதிக்கு கொடுக்கும்  மரியாதையை பார்த்த அவர் நீதிபதியாக வரவேண்டும் என்று முடிவு செய்தார்’ என்கிறார். தொடர்ந்து வன்ஷிதா குப்தா கூறுகையில், ‘எனது தந்தையின் தந்தை (தாத்தா) ரமேஷ் சந்திர குப்தா, நீதிமன்றத்தில் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்றவுடன் மந்த்சூரில் நீதித்துறை தொடர்பான தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தற்போது சிவில் நீதிபதியாக தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இதுகுறித்து வன்ஷிதாவின் தாயார் கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே வீட்டில் நீதிபதியாக வேண்டும் என்று விரும்பினார். தனது தந்தை கடினமாக உழைப்பதைப் பார்த்த அவர், தான் ​​வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று உணர்ந்தான். தற்போது அதனை சாதித்துக் காட்டியுள்ளார்’ என்று பெருமையுடன் கூறினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *