காலத்தை இழுத்தடிக்கும் செயலால் மறைமுகமான வெற்றியை நோக்கி ராஜபக்சர்கள்!

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர்களுக்கு மறைமுகமான வெற்றி கிடைத்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவை பதவி விலகக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்களின் தொடர் போராட்டம் ஒரு மாதத்தை அண்மித்துள்ள நிலையில், ராஜபக்சர்களின் ஆட்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனினும் அவர்கள் ஆட்சியை விட்டு செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

தற்போதைய நிலைமை குறித்து அரசியல் அவதானிகள் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைகளை விதிக்காமல் அவர்களை வீதிகளில் இறங்கி போராட விடுவது. இதன் மூலம் சலிப்படையும் மக்கள் தாமாகவே ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தி வீடுகளுக்கு சென்று விடுவார்கள் என்பது ராஜபக்ச சகோதரர்களின் பெரும் நம்பிக்கையாகும்.

அதேவேளை மக்களை ஆக்ரோஷமான கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்காக பிரதமர் பதவி விலகிறார், இடைக்கால அரசாங்கம், விரைவில் பொதுத் தேர்தல் என்ற நாடகங்களை அரங்கேற்றி காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

மறுபுறத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் பலர் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகளாவர். தற்போது அவர்களை காப்பாற்றும் பாரிய பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகிந்த – கோட்டா என்ற இரு பிரிவுகள் பிளவுபட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அரசாங்கத்தின் மீது கோபமாகவுள்ள மக்களுக்கு அசுவாசப்படுத்தும் தகவலாக இது பரிமாறப்பட்டு வருகிறது. எனினும் உண்மை நிலை அவ்வாறு இல்லை. ஆட்சியில் இருந்த பசில் ராஜபக்ஷ என்ற தனிநபரை மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்பது அரசியல்வாதிகள் நோக்கமாக இருந்தது. எனினும் மகிந்த, கோட்டாபய ஆகியோர் மீது அவர்களின் விசுவாசம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை தான் வைத்திருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றும் தெரிவித்து வருகிறார்.

மறுபுறத்தில் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியாத நிலையில் திணறி வருகின்றனர். அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் மைத்திரி, வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் மீதான நம்பிக்கையீனமே இதற்கான காரணமாகும். அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக நாடகம் போட்டாலும், மகிந்த தரப்புடன் சுமுகமான டீல் பேசப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இலங்கை ஆட்சியாளர்கள் மகா சங்கத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்தே அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது வழமை. எனினும் தற்போதைய நிலையில் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மகா சங்கத்தினர் பல முறை கோரிக்கை விடுத்தும் அதற்கு ராஜபக்ஷர்கள் செவிமடுத்ததாக தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் அனைத்து அழுத்தங்களையும் தாண்டியும் தமது ஆட்சியின் இருப்பை அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

நாட்டில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், மக்களின் போராட்டம் எண்ணமும் தேய்வடைந்து, அடுத்த வேளை சாப்பாட்டுக்கான பணத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது எழுச்சி போராட்டங்களின் வீரியமும் குறைந்து வருகிறது.

இது சில வாரங்களில் முற்றாக முடங்கி போகும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ராஜபக்ஷர்கள் தாம் நினைத்தது போல், மக்களையும் பலவீனமாக்கி, தாமும் ஆபத்திலிருந்து தப்பிக் கொள்ளும் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *