இளைஞர் படையணி விரைவு எதைச் சொல்ல விழைகிறது?

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் அமர்வதாகவும் இல்லை, அரசாங்கம் அடங்குவதாகவும் இல்லை. பொதுமக்கள் எதிர்ப்புக்களை பொருட்படுத்தாமல் இருப்பது, பொறுப்புள்ள அரசாங்கத்தின் பண்பாடும் இல்லை. இந்த லட்சணத்தில் இன்னும் சில நாட்கள் நீண்டால் நிலைமைகள் கை மீறிப்போகலாம். இரண்டு வகையில், இந்த கை மீறல்கள் இருக்கும். ஒன்று அரசாங்கம் பொறுமையிழப்பது, மற்றது நிர்வாகம் சீரலைவது. சரியாகக் கணக்கிட்டால் இந்த இரண்டும் மக்களுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மக்களாகிய நம்மிடம் பொறுமையும் பொறுப்பும் பிரதானமாக இருக்க வேண்டும்.

இயலுமான வரை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது காலிமுகக் கோஷங்கள். இதனால்தான், அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருக்கிறது. எனவே, பேச்சுக்களில் கலந்துகொண்டவாறு நமது நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வழிமுறைகளை விதிப்பதுதான் இப்போதைக்குள்ள வழி.

ஏனெனில், இந்த நிலைமைகள் ஏற்பட்ட நாட்களிலிருந்து வேறு எந்த அரசியல் நகர்வுகளும் வெற்றியளிப்பதாகவும் இல்லை. இளைஞர்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்குப் போகுமாறு சொல்கின்றனர். இந்நிலையிலுங் கூட, உள்ள ஆட்சிக்காலத்தை துணிந்து பொறுப்பெடுக்க எவரும் வருவதாக இல்லை. ஒரு வகையில், இதுவும் மக்களின் அபிலாஷைகளை அலட்சியம் செய்வது மாதிரித்தான்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்று பலதும் எதிரணியில் உள்ளன. இருந்துமென்ன, ஒன்றாக இருந்தாலும் இவர்கள் ஒன்றுபடவில்லை. அரசியலுக்கான தனித்தனி அஜந்தாக்களே இவர்களை ஒரே அணியில் பிரித்து வைத்திருக்கிறது. இந்த இளைஞர் சக்தி இதைப் புரிவது அவசியம். நன்கு விடயம் தெரிந்தவர்களாக இருப்பதால்தான், நாளாந்தம் இவர்களின் செல்வாக்குகள் உயர்ந்து செல்கிறன. ஆகவே, இந்தச் செல்வாக்கைப் பிரயோகிக்கும் பொறுப்பிலிருந்து நமது இளைஞர்கள் பின்வாங்கக் கூடாது.

எவரும் முன்வராத நிலையில் அரசாங்கத்தை விட்டெறிந்துவிட்டுப் போவது எப்படி? இதுதான் இன்றெழும் கேள்வி. சில வேளைகளில், 225 எம்.பிக்களையும் பதவி துறக்கும்படி இப்படையணி கோருகிறது. இவ்வாறு கோருவதும் பொருத்தமின்றியே போகிறது. நாட்டின் மொத்த வருமானத்தில், சுற்றுலாத்துறை, ஏற்றுமதித்துறை, சேவைத்துறை வெளிநாட்டு நன்கொடைகள், வெளிநாடுகளில் தொழிலாற்றும் நம்மவர் அனுப்புகின்றவை, கடன்பெறுகைகள் மற்றும் வெளிநாட்டு இருப்புக்கள்தான் பிரதானமானவை. இந்தத் துறைகளுக்குள் அரசியல் அதிகாரங்கள் கையாடியதால் வந்தவைதான் இந்த வீழ்ச்சிகள்.
இதிலிருந்து மீண்டு, எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்குமாறே எமது இளைஞர்கள் வேண்டுகின்றனர்.

ஆட்சியை யார் பொறுப்பெடுத்தாலும், இந்நெருக்கடிகள் இன்னும் சில காலங்களுக்கு நீடிக்கும் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. இதற்காகத்தான், பொறுப்பெடுக்க சிலர் பின்னடிக்கின்றனரோ தெரியாது. எனவே, இந்த இழுபறிகள் நம்மையே சீரழிக்கப்போகின்றன. இதனால்தான் சொல்கிறோம், நாட்டின் மிகப்பெரிய சக்தியாக அடையாளப்பட்டுள்ள இளைஞர்கள், அரசுடன் பேசப்பொருத்தமான தருணமே இது. இருப்பவர்களால் வந்த வினையை, இன்னொருவர் வந்து தீர்க்க இயலாது. எனவே, இருக்கும் காலத்தை அவகாசமாக வழங்கி, நெருக்கடிகளை நீக்குவது பற்றியே இளைஞர் படையணி பேசுவது சிறந்தது.

இருபது நாட்கள் கடந்தும் இருப்பவர்கள் போகவுமில்லை, இன்னொருவர் வருவதற்கான 113 பலம் காட்டப்படவுமில்லையே! வயிற்றுப்பசிக்கான போராட்டத்தை வாழ்நாள் முழுவதுமா இழுத்துச் செல்வது? இப்போது எழும் கேள்விகளே இவை. உருப்படியான ஒரு பொருளாதாரத் திட்டத்தை எவரும் முன்வைக்காததால், அரசியல் சாயம் பூசப்படும் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர், நமது இளைஞர்கள் பேச்சுவார்த்தை மேசையை நோக்கி நகர வேண்டும்.

விமான, கப்பல் சேவைகளால் கிடைக்கும் அந்நியச்செலாவணிகள் வீழ்சியடைந்ததேன்? பாரம்பரிய ஏற்றுமதித்துறை வருமானத்துக்கு நடந்ததென்ன? சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இன்னும் சிறந்த திட்டங்கள் இருக்கிறதா? வெளிநாடுகளின் நன்கொடைகளை மேலும் பெறுவதற்கு உள்ள வழிகளென்ன? படுகடன்களிலிருந்து இப்போது மீள முடியாது. ஆனாலும், இக்கடனை இனியும் பெறாமலிருப்பது எப்படி?இவற்றுக்கு தீர்வுடன், வருவோருடன்தான் இந்த இளைஞர்கள் படையணி பேச வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *