பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீப்பிடித்த மொபைல் போன்!

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில். பயணியின் செல்போன் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானப் பணியாளர்கள் சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. தொழில்நுட்பங்கள் வளர, வளர செல்போன்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. கையடக்க தொலைபேசியாக இருந்த செல்போன்கள் இன்று கையடக்க கம்ப்யூட்டராக வளர்ச்சி கண்டுள்ளன. செல்போன் தயாரிப்பிலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.

 குறிப்பாக, அதிவேகமாக சார்ஜ் ஏறக் கூடிய பேட்டரிகள், நீண்ட நேரம் சார்ஜ் நீடித்திருக்கக் கூடிய பேட்டரிகள் என ஏகப்பட்ட விதம் வந்து விட்டது. முன்பெல்லாம், பேட்டரியை தனியாக எடுக்க முடியும். ஆனால், தற்போதைய நவீன செல்போன்கள் திறக்க முடியாதபடி, இன்பில்டு பேட்டரியுடனே வருகின்றன. இந்நிலையில், செல்போன்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து விட்டன. நேற்று முன்தினம், அசாமில் இருந்து டெல்லி நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென பயணி ஒருவரின் செல்போன் தீப்பிடித்து எரிந்தது.

செல்போனில் இருந்து புகை மற்றும் தீப்பொறி ஏற்பட்டதை பார்த்த விமான  ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, தீயணைப்பான் கொண்டு செல்போன் தீப்பிடிக்கும் முன்பாக அணைத்தனர். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபோல், விமானத்தில் செல்போன்கள் தீப்பிடிப்பது முதல் முறை அல்ல. எனவே, லித்தியன் அயன் பேட்டரி மூலம் இயங்கும் மின்னணு சாதனங்கள் தீப்பிடிப்பதை தவிர்க்க, விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. செல்போன்கள் தீப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல, இது உயிருக்கே உலை வைக்கக் கூடிய விஷயம். பெரும்பாலும் செல்போன்கள் தீப்பிடிக்க அதன் பேட்டரிகளே காரணமாக உள்ளன.

செல்போன்கள் தீப்பிடிப்பதற்கு 5 பொதுவான காரணங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இதோ:

  • அதிகாரப்பூர்வ போன் சார்ஜர்களை பயன்படுத்தாதது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சந்தையில் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற சார்ஜர்கள், அதிவேக சார்ஜர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம். செல்போன் வாங்கும் போது, அதனுடன் தரப்படும் சார்ஜர்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக ஐபோன்களுக்கு மலிவான பிற சார்ஜர் அல்லது சார்ஜர் கேபிள்கள் பயன்படுத்தக் கூடாது.
  • சில சமயம் அதிக சூடு காரணமாகவும் பேட்டரிகள் தீப்பிடிக்கலாம். சிலர் இரவு முழுவதும் போனை சார்ஜரில் போட்டுவிட்டு, காலையில் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பர். இதனால் போன் அதிக சூடாகி பேட்டரி வெடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, 100 சதவீதம் சார்ஜ் ஏறியவுடன் சார்ஜரிலிருந்து போனை எடுத்துவிட வேண்டும்.
  • திரவத்தால் ஏற்படும் சேதமும் ஸ்மார்ட்போன்கள் தீப்பிடிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உங்கள் செல்போன் தெரியாமல் தண்ணீரிலோ அல்லது வேறு ஏதேனும் திரவத்திலோ விழுந்தால், அதை உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டு, நீங்களாகவே வீட்டு வைத்தியம் செய்தால் விளைவு விபரீதமாகக் கூடும்.
  • மனித தவறுகளால் போனில் ஏற்படும் சேதமும் பேட்டரியை பாதிக்கக் கூடும். எனவே, செல்போன்களை எப்போதும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை அடிக்கடி கீழே போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • அதிகாரப்பூர்வமற்ற சர்வீஸ் சென்டர்களில் செல்போனை சர்வீஸ் செய்ய தருவதும் பேட்டரி பாதிக்க காரணமாகிறது. செல்போனில் பிரச்னை எனில் அந்நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரையே நாடுங்கள் என்கின்றன செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *