நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் யார்?

மத்திய வங்கியின் கையிருப்பில் மிகக் குறைந்த அளவிலான அந்நிய செலாவணிக் கையிருப்பே காணப்படுவதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நிதியமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவினால் வழங்கப்பட்ட 1 தசம் 5 பில்லியன் பெறுமதியான நிதிப்பரிமாற்ற வசதி காணப்படுகின்ற போதிலும், அதனை பயன்படுத்த முடியாது எனவும், அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு 6 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், குறித்த காலப்பகுதி மிகவும் சவாலானதாகக் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருந்த போதிலும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் இருவர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோர் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் காணப்பட்டதாக நிதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

மேலும், நிவாரணங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் முன்னோக்கி செல்ல முடியாது என்பது தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலப்பகுதியில் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும், கொரோனா முடக்க காலப்பகுதியில் குறித்த சலுகைகள் நீக்கப்பட்டிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுடனான கடன்களை மறுசீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதன் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைக் காலத்தின் ஊடாக குறிப்பிட்ட காலத்துக்கு கடன் கொடுப்பனவுகள் மேற்கொள்வது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட மாட்டாது எனவும், அதனை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்காக ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கு மேலதிகமாக, மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக வங்கியின் அதிகாரிகளை தான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும், இலங்கைக்கு உதவி வழங்க அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவசர உதவித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்வரும் 6 மாதத்திற்காக வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக உடனடியாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் மறுசீரமைப்பின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் நிகழ்ச்சி நிரலொன்றுக்கு செல்வதன் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாணயப் பெறுமதியை மிதக்க விடுவதற்கு மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூட அறிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாணயச் சபையினால் டொலரின் பெறுமதியை 229 ரூபா வரை மதிப்பிறக்கம் செய்ய மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தனிப்பட்ட தீர்தானத்துக்கு அமையவே நாணயப் பெறுமதியை மிதக்க விடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *