நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நீக்கப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர்!

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான் கான் பெற்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பரபரப்பு கட்சிகளின் தொகுப்பு இதோ…

பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் கடைசி பந்து வரை போராடிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நாள் முழுவதும் நடந்த பெரும் அரசியல் திருப்பங்களுக்கு பின்னர்  நள்ளிரவில் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நள்ளிரவுக்கு பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 174 வாக்குகள் பதிவாகி பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று மதியம் 2 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

பாகிஸ்தானில் நடந்த பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு இதோ…

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக சோசலிச, தாராளவாத மற்றும் தீவிர மதவாத கட்சிகள் அனைத்தும் வானவில் கூட்டணியை அமைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 174 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று தீர்மானம் நிறைவேறியது. பாகிஸ்தான் நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர், எதிர்க்கட்சிகள் மட்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்தனர், இந்த செயல்முறையின் போது இம்ரான் கான் சபையில் இல்லை. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் அவர் காலி செய்தார்.

இம்ரான் கானுக்குப் பதிலாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள  நபரான ஷெபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சிகளின் தைரியத்தைப் பாராட்டினார், இது பொதுவாக பாகிஸ்தானின் அரசியலில் காணகிடைக்காத நிகழ்வு. நேற்றைய அவையில் பேசிய ஷெபாஸ், “பாகிஸ்தான் இப்போது மீண்டும் நேர்மை மற்றும் சட்டத்தின் பாதையில் செல்கிறது. பழிவாங்காத மற்றும் நிரபராதிகளை சிறையில் அடைக்காத பிரகாசமான எதிர்காலத்தை நாங்கள் பார்க்கிறோம்,” என்று கூறினார்.

எதிர்க்கட்சியான பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது. தற்போது மக்களை பழைய பாகிஸ்தானுக்கு வரவேற்கிறோம், ஜனநாயகம் என்பது ஒரு பொன்னான பழிவாங்கும் நடவடிக்கை” என்று அவர் இம்ரான் கானின் “நயா (புதிய) பாகிஸ்தான்” என்ற முழக்கத்தை கிண்டல் செய்தார்

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் கூடிய நிலையில் பெரும் பரபரப்புகள் நிலவியது. இந்த சூழலில் அவையின் சபாநாயகரும், துணை சபாநாயகரும் வாக்கெடுப்புக்கான நீதிமன்ற காலக்கெடுவிற்கு முன்னதாக ராஜினாமா செய்தனர். இதனால் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நள்ளிரவில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்காக திறக்கப்பட்டது. இந்த பரப்பரப்புகளுக்கு இடையே பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவைக் கூட்டத்தில் பதவி விலகப் போவதில்லை என அறிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் கைது செய்யப்படலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில் கைதிகள் வாகனம் ஒன்று சட்டசபையை வந்தடைந்தது. இதனிடையே எதிர்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினர். மேலும், பாகிஸ்தான் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, எந்த ஒரு மூத்த அரசு அதிகாரியோ அல்லது நிர்வாகிகளோ தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவரான பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதன் மூலம் நாட்டின் அரசியல் விவகாரங்களில் ராணுவத் தலையீட்டை நாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் ஷெரீப், “சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் இம்ரான் கானைக் கைது செய்ய வேண்டும்” என நேற்று இரவில் கோரிக்கை வைத்தார்

இந்த சூழலில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்குமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் இம்ரான் கான், “இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு” எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

வெளிநாட்டு சக்திகள் தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், இதை நிறைவேற்ற பாகிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள் ஆடுகள் போல வியாபாரம் செய்யப்படுவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். “அமெரிக்க இராஜதந்திரிகள் எங்கள் மக்களைச் சந்திப்பதை நாங்கள் அறிந்தோம். பின்னர் முழு திட்டத்தைப் பற்றியும் எங்களுக்குத் தெரிந்தது. தேசிய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அனைத்து விவரங்களையும் பகிரங்கமாக வெளியிட தமக்கு சுதந்திரம் இல்லை” என்று தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *