ஊழல் செய்து நாட்டை சீரழித்துவிட்டனர் இனி இலங்கை மீள்வதற்கு வழியேயில்லை  இந்தியாவுக்கு சென்ற அகதிகள் தெரிவிப்பு!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் அரிசி , கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு புலம்பெயர்பவர்களில் அதிகமானோர் தமிழகத்திற்குதான் வருகின்றனர்.

அதன்படி இலங்கையிலிருந்து ஏற்கெனவே தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு வந்த 20 பேர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைவதை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்துக்குள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக நுழைய‌ முயன்றவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு ஃபைபர் படகில் திருகோணமலையைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கியுள்ளனர். தகவலறிந்து ராமேஸ்வரம் மரைன் போலீஸார், கடலோரக் காவல்படை போலீஸாரின் ஹோவர் கிராப்ட் படகின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று அகதிகளை மீட்டு தனுஷ்கோடிக்கு கொண்டு வந்தனர்.

அப்போது கைக்குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக வந்த இலங்கை அகதிகளைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், தங்கள் கடைகளில் இருந்த உணவுப் பண்டங்களை கொண்டுவந்து கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீஸார் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீஸாரிடம் “இலங்கையில் உணவுக்கே வழியின்றி பட்டினியாக கிடக்கிறோம். அங்குள்ள விலைவாசி உயர்வு மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. எப்படியாவது எங்கள் பிள்ளைகள் உயிரையாவது காப்பாற்றியாக வேண்டும் என நகை பொருள்களை விற்று 2 லட்சம் செலவு செய்து உயிரை பணையம் வைத்து இங்கு வந்துள்ளோம்.

எங்கள் நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்து நாட்டை சீரழித்து விட்டனர். அதிலிருந்து எங்கள் நாடு மீள்வதற்கு வழியே இல்லை. அரசியல்வாதிகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தப்பிஓட முடிவு செய்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல காத்துக் கிடக்கின்றனர். எங்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும். எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் அண்ணா…” எனக் கண்ணீர்த் ததும்ப கதறியபடி கூறினர்.

முன்னதாக, நேற்று இரவு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் அகதிகளாக தமிழகம் வந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் அகதிகளாக வந்திருக்கின்றனர்.

இதையடுத்து இந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மரைன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *