இது அரசியல் செய்யும் நேரம் அல்ல பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு இன்று (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருநாகல் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் கொபெய்கனே மீகஸ்வௌ பிரதேசத்தில் உள்ள குளத்தின் புனரமைப்பு பணிகள் கௌரவ பிரதமரினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொல்பித்திகம கந்தகொல்ல குளம், பெமினிகல்ல மசுரன்கோட்டே குளம் மற்றும் கிரிபாவ நிக குளம் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அக்குளங்கள் உள்ளிட்ட 5000 குளக்கட்டுகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதிலும் உள்ள 100 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நீரை நம்பித்தான் வாழ்கின்றன. தண்ணீர் நம் வாழ்வின் அடிப்படை. நாம் பின்னோக்கிச் செல்லும்போது, உலகில் உள்ள ஒவ்வொரு நாகரீகமும் நீரைக் கொண்டே உருவாகிறது. நம் நாட்டுக்கும் அப்படித்தான். பழங்காலத்திலிருந்தே, இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒவ்வொரு அடியிலும் விவசாயமும் நீர்ப்பாசனமும் பின்னிப்பிணைந்துள்ளன.

அந்தக் காலத்தில் கிராமம், விகாரை, குளம், தாதுகோபம் என்ற கருத்துதான் நமது கலாச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது. மேம்பட்ட நீர்ப்பாசனத்தின் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே இவை அனைத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.

குளங்கள் மட்டுமின்றி அவற்றுடன் இணைக்கப்பட்ட கால்வாய்களும் நமது பண்டைய முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை. ராட்சத கால்வாய் போல் உலகையே வியக்க வைத்த படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. இத்தகைய மேம்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தைப் பரம்பரையாகப் பெற்றதால்தான் நம் நாட்டில் விவசாயம் காப்பாற்றப்பட்டது.

இவ்வகையில் நம் நாட்டில் விவசாயத்திற்கு ஊட்டமளிக்கும் ஏராளமான குளங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் உள்ளன. ஆனால் அவ்வப்போது இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், உரிய நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால், சிலர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். நாம் அறிந்த வரையில், நம் நாட்டில் கிராமப்புற சிறு தொட்டிகள், மதகுகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் உள்ளிட்ட சுமார் 50,000 அமைப்புகள் நீண்ட காலமாக முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன.

நீர்ப்பாசன அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முடியும் போது சுமார் ஆயிரம் கிராம நீர்ப்பாசன அமைப்புகள் சேதமடைகின்றன. இவற்றை உரிய காலத்தில் பராமரிக்க வேண்டும். இருப்பினும், தெளிவான பார்வை இல்லாததால், இவை அழிந்துவிட்டன.

இதனால், குளங்கள், கால்வாய்களின் மதகுகள் உடைந்து, பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வழியின்றி உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 150,000 நெல் வயல்கள் வெற்று நிலங்களாக காணப்படுவதாக மகாவலி அமைச்சு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால கனமழை மற்றும் நீண்ட கால வறட்சியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலைமையை எதிர்கொள்ள, நமது நாட்டின் ஒட்டுமொத்த நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம். கிராமப்புற நீர்ப்பாசனத் திறனை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் வெள்ளம் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.

தேசிய உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமையவே 5,000 கிராமப்புற சிறு நீர்ப்பாசன மற்றும் குடிநீர் அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான திட்டத்தை எங்கள் அரசு ஆரம்பித்துள்ளது. இன்று உங்கள் பிரதேசத்தில் உள்ள குளம் உங்கள் நலனுக்காக புனரமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் எமது முன்னோர்கள் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக கடந்த காலத்தில் உருவாக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் வாய்க்கால்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க முடியும் என நம்புகின்றோம்.

கடந்த காலங்களிலும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் குளங்கள் புனரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது எப்போதும் அறிஞர்களாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டன.

குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்க தொழில்நுட்பம் உள்ளது. குளங்களை தூர்ந்து ஆழப்படுத்தினால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, குளங்கள் அணைக்கட்டுகளை புனரமைப்பதற்கான தேசியத் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். கடந்த கால தொழில்நுட்பமும், நவீன அறிவியல் அறிவும் இன்று இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம். ஒரு நாடாக நாம் ஒரு தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து வருவதுடன், வரலாற்றில் மிகவும் சவாலான நேரத்தை எதிர்கொள்கிறோம். உள்ளூர்வாதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமே எங்கள் நோக்கம். இந்த அமைப்பு சீரமைக்கப்படும் போது, கிராமப்புற மக்கள் விவசாயத்தில் படும் பல சிரமங்கள் நீங்கும். அதுமட்டுமின்றி, குளங்கள் புனரமைக்கப்படும் போது, அது பல தொழில்களுக்கு இடமளிக்கும். நன்னீர் மீன்பிடி தொழிலில் கூட ஈடுபடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளது.

இத்திட்டம் யதார்த்தமாகும்போது விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமன்றி கிராமியப் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்துவதே எமது தேவை.
இன்று மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இவை நமக்குத் தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதது போன்று உள்ளார்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதனால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நாட்டைப் பற்றி சிந்திக்கவும், அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான தளமொன்றை நிர்மாணித்தோம்.

கொவிட் தொற்று நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. நாங்களே அதனை செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராக உள்ளோம். இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களை அடுத்த முறை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

புத்தாண்டு காலம் நெருங்குகிறது. உண்மையான பிரச்சனையை பார்த்துக்கொண்டே நாளை எரிபொருள் இருக்காது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொய்யான மாயைகளை உருவாக்குகிறார்கள். சில பிரச்சினைகள் சிலரின் நலனுக்காக மக்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டன. அதனால்தான் கூறினேன், நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், உங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம் என்று பிரதமர் கூறினார்.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள்,

கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து இவ்வருட இறுதிக்குள் இலங்கை முழுவதும் 4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மொரகஹகந்த நீர்த்தேக்கம் என்பது கௌரவ பிரதமரின் மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒரு திட்டமாகும். அந்தத் திட்டம், நான் நீர்ப்பாசன அமைச்சராக இருந்தபோது, நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த ஏராளமான பொறியாளர்களை அந்தப் பகுதிக்கு வரவழைத்து எல்லாவற்றையும் ஆய்வு செய்து, அதற்கான பணிகளை ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை கையளிக்கும் போது, சுமார் 40 வீதமான அணைக்கட்டுக்கான பணிகள் நிறைவடைந்திருந்தன. தற்போது அப்பணி நிறைவடைந்துள்ளது. களு கங்கை திட்டத்தின் பணிகள் கடந்த அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது வடக்கே, வட மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பணிகளை 2020-ல் தொடங்க எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. 2021 ஜனாதிபதியின் தலைமையின் கீழ் வட மத்திய பிரதான கால்வாயின் வேலைகளை ஆரம்பித்தோம். 94 கிமீ நீளமுள்ள பெரிய கால்வாய். இந்த கால்வாய் ஹுருலு கால்வாய்க்கு நீரை கொண்டு செல்வதுடன் அநுராதபுரத்தில் உள்ள நுவர வௌ உட்பட சுமார் 2000 நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்குகிறது. அதேநேரம் வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக வயம்ப மஹா எல திட்டத்தை கௌரவ பிரதமரின் தலைமையில் ஆரம்பித்தோம். இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அது கல்கமுவ மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கு நீர் கொண்டு செல்வதற்கு. நான் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களில் கல்கமுவ பிரதேசத்தில் போட்டியிட்டமையால் சிரமங்களை நான் நன்கு அறிவேன். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

அதேபோன்று மஹிந்த சிந்தனையில் தெதுரு ஓயாவை நிர்மாணிப்பதும் இருந்தது. குறுகிய காலத்தில் சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. அதன் பலனை இன்று அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். நாடு முழுவதும் 103 ஆறுகள் உள்ளன. அந்த ஆறுகளின் அப்பிரதேசத்திற்கு தேவையான நீரை கடலுக்கு அனுப்பாது அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அணைக்கட்டுகளை அமைத்து அவர்களை வளமாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

நேற்று பிலிப் குணவர்தனவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டேன். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னாள் பொறியியலாளர் திரு.அன்டன் நாணயக்கார களனி நதி தொடர்பில் விரிவுரை ஆற்றினார். 1958 ஆம் ஆண்டு களனி, மகாவலி மற்றும் வளவே ஆகிய ஆறுகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் அரசாங்கம் 1958 இல் மூன்று நாடுகளை நியமித்தது. களனி ஆற்று நீரை வடமேல் மாகாணம் மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டமிடப்பட்டது. ஆனால் இன்று வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மகாவலி போன்று அடுத்த திட்டமாக களனி ஆற்றை வடமேற்கு பகுதிக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். களனி ஆற்றில் இருந்து வடமேல் மாகாணத்திற்கு தேவையான அனைத்து நீரையும் வழங்க வேண்டும்.

பிரதமர் ஈரானுக்கு விஜயம் செய்த போது, அதன் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இதன் பணிகள் நவம்பர் 2015க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஊவா கீழ் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதன் மூலம் 120 மெகாவொட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று வரை அதை செய்ய முடியவில்லை. 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மே மாதத்திற்குள் உமா ஓயா திட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 120 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

நாம் திட்டமிடுவதைத் தொடர முடிந்தால் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் வராது. அரசாங்கங்கள் மாறுகின்றன. நீண்ட கால வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்து வரும் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தும். அதனால் ஏற்படும் விளைவுகளையும், நஷ்டத்தையும் அடைவது நாடும் மக்களும்தான். இன்றும் அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினைகளை முறியடிப்பதற்கும் அவற்றை முறியடிக்க எம்முடன் கைகோர்க்குமாறும் மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள்,

கஸ்டத்தில் வீழ்ந்த ஒரு அரசாங்கத்தையே நாம் பொறுப்பேற்றோம். பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தையே நாம் பொறுப்பேற்றோம். முன்னைய அரசாங்கம் சரியான நேரத்தில் கொள்கை முடிவுகளை எடுக்காத காரணத்தினால் இன்றும் எமது மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு குளம் கட்டாத, ஒரு நீர்ப்பாசன திட்டத்தையும் செயல்படுத்தாதவர்களே இன்று விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பிரதமரே, நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் ஒரு கிலோ நெல் ரூ.40க்கு கொண்டு வரப்பட்டது. விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்தீர்கள்.
கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நெற்பயிர்களை பயிரிட வேண்டாம் என்று கூறியது. இன்று ஒரு குளத்தை சீரமைக்க தொடங்கியவுடன் என்ன சொல்கிறார்கள். புதையல் தோண்டவோ, மண்ணைத் தோண்டவோ, மணலைத் தோண்டவோ முயற்சிப்பதாக கூறுகின்றனர். மரியாதையே இல்லை. விவசாய சமூகத்திற்காக நிற்பதாக காட்டி விவசாய சமூகத்தின் வளர்ச்சியை நிறுத்த நினைக்கிறார்கள்.

கொவிட் தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்ட போது அவர்கள் மக்களை வீதிக்கு இறக்கினார்கள். ஜனாதிபதியையும் பிரதமரையும் அவமதிக்கிறார். அரசு அவமதிக்கப்படுகிறது. பணிபுரியும் அதிகாரிகள் அவமதிக்கப்படுகிறார்கள்.

பணிபுரியும் அதிகாரிகள் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். இன்று உங்கள் அழுத்தத்தை அறியாத ஜனாதிபதியோ பிரதமரோ இந்த அரசாங்கத்தில் இல்லை. சவால்கள் வருகின்றன. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுராத ஜயரத்ன அவர்கள்,

ஒரு நாடாக நாம் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளும் போது, ஒரு காலத்தில் ஈஸ்டர் தாக்குதலால் நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னும் இரண்டு ஆண்டு காலங்கள் கொவிட் பேரழிவால், இந்த நாடு செயல்படாமல் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த, நமது சிறப்பு ஏற்றுமதி மையங்களில் ஒன்றான ரஷ்யாவின் இன்றைய நெருக்கடி, மற்றும் உலக எரிபொருள் விலை. இந்தச் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டுதான் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும்.

சிலர் மேடையில் ஏறியவுமனட நீலம், பச்சை, சிவப்பு என நிறங்கள் மாறும்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கற்பிக்க முயல்கிறார்கள். ஆனால் கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் சவால்களை முறியடித்த தலைவர். எனவே, சாத்தியமற்றது என்று கூறப்பட்ட சவால்களை முறியடித்த உங்கள் மீதும் ஜனாதிபதி மீதும் இந்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *